இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. அகமதாபாத்தில் இன்று தொடக்கம்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை, இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனைப் பட்டியலில் இணைந்தது. அந்த உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் களம் காண உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த ஷுபமன் கில்லே, இந்திய தொடரையும் முதல்முறையாக வழிநடத்துகிறார்.
கடந்த ஜூன், ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. கேப்டன் ஷுப்மன் கில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து வியப்பூட்டினார். தற்போது இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் அவருக்கும் அணிக்கும் மேலும் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்தத் தொடரில், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகிய தமிழக வீரர்கள் இடம்பெற்றிருப்பது உற்சாகத்தைத் தந்துள்ளது. எனினும், ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் முழுமையாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதலாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி கண்டு 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2002-ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.