ஆசியக் கோப்பை.. இன்று UAEஉடன் ஆட்டத்தைத் தொடங்கும் இந்திய அணி!
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஆட்டத்தை தொடங்கப்போகும் இந்திய அணி குறித்த ஓர் அலசலைப் பார்க்கலாம்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், ஹாங்ஹாங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது. மறுபுறம், ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, இன்று தன்னுடைய முதல் ஆட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவமில்லாத ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதுகிறது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு, முஹமது வாசீம் தலைமையில் களமிறங்கும் அமீரக அணி எந்தளவுக்குச் சவால் கொடுக்கும் என்பதைக் காண சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட்டத்தைத் தொடங்கப்போகும் இந்திய அணி குறித்த ஓர் அலசலைப் பார்க்கலாம்.
சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், சஞ்சு சாம்சனின் இடம் என்பது சங்கடமான நிலையிலேயே உள்ளது. துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் ஷர்மா மற்றொரு தொடக்க வீரராக இறங்கவுள்ளார். திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் மத்திய வரிசைக்கு வலுசேர்க்கவுள்ளனர். ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் ஐந்தாம் நிலை வீரராகக் களமிறங்குவார் என்று தெரிகிறது. 71 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் படேல், 535 ரன்களையும், 71 விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறார். அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. அவருடன் மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா மத்திய வரிசையில் பலம் சேர்க்கிறார். ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லாதநிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ஜிதேஷ் ஷர்மா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான வேகப்பந்து வீச்சுக்கு பும்ரா, அர்ஷ்தீப் சிங் உத்தரவாதம் அளிக்கத் தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு குல்தீப் யாதவ் உள்ளார். ஒருவேளை, குல்தீப் யாதவ்க்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தி களமிறங்கவும் வாய்ப்புண்டு.