IND - PAK விளையாட்டுத் தொடர்கள்.. மத்திய அரசு போட்ட உறுதியான கண்டிஷன்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு விளையாட்டுத் தொடர்களில் இந்தியா கலந்துகொள்ளாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதுகுறித்த செய்தியை இங்குப் பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன. எனினும், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் மூன்று முறை மோதும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்தத் தொடரிலும் இந்தியா விளையாடக் கூடாது என பிசிசிஐக்கு அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் விளையாட்டு ரீதியாகக்கூட எந்த உறவுகளையும் இந்தியா வைத்துக்கொள்ளாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடனான விளையாட்டுத் துறை உறவுகள் குறித்த கொள்கை விளக்கம் ஒன்றை அத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 'இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்லமாட்டார்கள். அங்கிருந்தும் இங்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்' எனக் கூறப்பட்டுள்ளது. 3ஆவது நாட்டில்கூட பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் பல அணிகள் பங்கேற்கும் தொடர் என்பதால் அதில் பங்கேற்பதை தவிர்க்க முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான விளையாட்டுகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதில்லை. மேலும் பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நேரடி நிகழ்வுகளுக்கு போட்டியிட முடியாது. இருப்பினும், பெரிய சர்வதேச போட்டிகள் வரும்போது, அவை இந்தியாவிலோ அல்லது வேறு இடத்திலோ நடத்தப்பட்டால் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.