ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20.. வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

பெங்களுருவில் இன்று நடக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்தாவது சர்வதேச டி20 போட்டியில் தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்ட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடிவருகிறது. 4 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது இந்தியா. இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி, கவுஹாத்தியில் நடந்த மூன்றாவது போட்டியில் மட்டும் தோற்றது. ஏற்கெனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்று மாலை ஐந்தாவது போட்டி பெங்களூருவில் நடக்கிறது.

கடந்த போட்டியிலேயே இந்திய அணி பல மாற்றங்களை செய்திருந்தது. உலகக் கோப்பைக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியதால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்குப் பதில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். முதல் 3 போட்டிகளில் இரு அரைசதங்கள் அடித்திருந்த இஷன் கிஷன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் ஜிதேஷ் ஷர்மா களமிறக்கப்பட்டார். அதேபோல் பந்துவீச்சில் சொதப்பிய பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு ஆவேஷ் கான் வாய்ப்பு பெற்றார். காயத்தால் வெகு காலம் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த தீபக் சஹார், ஆர்ஷ்தீப் சிங்குக்கு பதில் விளையாடினார். இப்படி இந்திய அணி 4 மாற்றங்களுடன் விளையாடியிருந்தாலும், ஆல்ரவுண்டர்கள் ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆறாவது பௌலர் இல்லாமலேயே இந்திய அணி ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், இரு ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது பெரிதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழக ரசிகர்கள் மத்தியில் வாஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர் சமீப காலமாகவே அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். அதனாலேயே அவரால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியவில்லை. கடந்த ஐபிஎல் தொடரிலும் கூட காயத்தால் விலகினார். அதனால் அவர் 2024 உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெறவேண்டும் என்றால், மீதமிருக்கும் போட்டிகளில் அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும். நம்பர் 7 அல்லது நம்பர் 8 என இரண்டு பொசிஷன்களிலுமே அவரால் விளையாட முடியும். கடைசி கட்டத்தில் தன் பேட்டிங்கால் அவரால் அணிக்கு உதவ முடியும். அதுமட்டுமல்லாமல் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி எதிரணிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவர். அதனால் அக்‌ஷர் படேலுக்கு ஓய்வு கொடுத்து இந்திய அணி வாஷிங்டனை களமிறக்க முடியும்.

அக்‌ஷர் படேல் 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். பேட்டிங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும் பந்துவீச்சில் நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். பவர்பிளே, மிடில் ஓவர்கள் என இரண்டு கட்டத்திலும் மிகச் சிக்கனமாகப் பந்துவீசி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறார். வாஷிங்டன் சுந்தரால் அதே வேலையை சிறப்பாகச் செய்ய முடியும். அதனால் இந்தப் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அதேபோல், ஷிவம் தூபேவுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதும் முக்கியம். ஏனெனில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. ஆறாவது பௌலர் என்பது உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பெரும் பிரச்னையாக இருக்கும் நிலையில், இதுபோன்ற தொடரில் கூட ஆறாவது பௌலரைப் பயன்படுத்தாதது பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஷிவம் தூபே போன்ற ஒரு வீரரை ஸ்குவாடில் தேர்வு செய்துவிட்டு விளையாடவைக்காமல் இருப்பது விமர்சனங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் போட்டியில் அவரும் விளையாடலாம்.

இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்

1. யஷஷ்வி ஜெய்ஸ்வால்

2. ருதுராஜ் கெய்க்வாட்

3. ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்)

4. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

5. ரிங்கு சிங் / ஷிவம் தூபே

6. ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)

7. அக்‌ஷர் படேல் / வாஷிங்டன் சுந்தர்

8. தீபக் சஹார்

9. ரவி பிஷ்னாய் / வாஷிங்டன் சுந்தர்

10. ஆவேஷ் கான்

11. முகேஷ் குமார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com