’மரண அடி..’ 271 ரன்கள் குவித்த இந்தியா.. சிக்சர்களில் வரலாற்று சாதனை!
இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் இந்தியா 271 ரன்கள் குவித்து மிரட்டியது. இஷான் கிஷன் 103 ரன்கள் அடித்து முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். இந்தியா 23 சிக்சர்களை பறக்கவிட்டு, இருதரப்பு டி20 தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணியாக வரலாற்று சாதனை படைத்தது.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது.
இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது.
271 ரன்கள் குவித்த இந்தியா..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 271 ரன்கள் குவித்து மிரட்டியது. 42 பந்தில் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என துவம்சம் செய்த இஷான் கிஷன் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இஷான் கிஷன் 103 ரன்கள் அடிக்க, 26 பந்தில் அரைசதமடித்த சூர்யகுமார் யாதவ் அதிவேகமாக டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்தார். தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியாவும் 17 பந்தில் 4 சிக்சர்கள் உட்பட 42 ரன்கள் குவிக்க 271 ரன்கள் என்ற பிரமாண்ட டோட்டலை குவித்தது இந்தியா.
சிக்சர்களில் வரலாற்று சாதனை..
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 23 சிக்சர்களை பறக்கவிட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 69 சிக்சர்களை பதிவுசெய்து மிரட்டியது. இரண்டு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு டி20 தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணியாக வரலாறு படைத்தது இந்தியா.
இதற்கு முன்பு 64 சிக்சர்களுடன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட நிலையில், இந்தியா இரண்டு அணிகளையும் பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது.

