இந்தியா - பாக். போட்டியின் போது Hotstar-ஐ திணற வைத்த ரசிகர்கள்; உச்சம் தொட்ட பார்வையாளர் எண்ணிக்கை!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை 3.5 கோடி பார்வையாளர்கள் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் கண்டுகளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிpt web

உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர் தொடங்கியது முதலே பல ட்விஸ்ட் & டர்ன் நடந்து வருகிறது. அதிக முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து நேற்று ஆப்கானிஸ்தானிடம் மண்ணை கவ்வியது. இப்படி எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

மற்ற போட்டிகள் எப்படி இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கூடுதலான ஒரு ஹைப் இருந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா செல்ல மறுத்த நிலையில், இந்தியாவுக்கு விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி வந்துள்ளது. இதனால், இந்தியாவில் நடைபெறும் இருநாட்டு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

அதேபோல், போட்டிக்கு முன்னதாகவே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு இடையே பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்ட்விட்டர்

பாகிஸ்தான் வீரர்களுக்கான விசா, அவர்களது பயிற்சி ஆட்டம் என பல்வேறு விவகாரங்களைத் தாண்டித்தான் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்த அந்த போட்டியும் வந்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையில் 8 ஆவது முறையாக வென்றது.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் வீரர்கள் தங்களது விக்கெட்களை இழந்த போதெல்லாம் அஹமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர். மைதானத்தில் இருந்த டிஜே வும் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை ஒலிக்கவிட ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திலும் இது விவாதத்திற்குள்ளானது. பல்வேறு தரப்பினர் இதை ஆதரித்தும் எதிர்த்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்ட்விட்டர்

இந்நிலையில், ஹாட் ஸ்டார் நிறுவனம் தனது சமூக ஊடகங்களில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கை குறித்த தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை 3.5 கோடி பார்வையாளர்கள் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் கண்டுகளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது. முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை 32 மில்லியன் பார்வையாளர்கள் கண்டிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்தியா பாகிஸ்தான் போட்டி மீதான மக்களது எதிர்பார்ப்பை இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை தெரியப்படுத்துகிறது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com