IND-PAK மோதல்.. மீண்டும் கைக்குலுக்காத 2 கேப்டன்கள்! இந்தியா பேட்டிங்!
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் அரசியல் பதற்றம் மத்தியில் போட்டி நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், தற்போது அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மழையின் அச்சுறுத்தலுக்கு இடையிலும் இந்தப் போட்டி நடக்கவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, டி20 போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை மோதிய 16 போட்டிகளில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, டி20 உலகக்கோப்பையில் இந்தியா 7 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.
பிரேமதாசா மைதானத்தில் 2023ஆம் ஆண்டு முதல் ஸ்பின்னர்களின் ரன் ரேட் 6.77 மட்டுமே என்பதால், பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மது, முஹமது நவாஸ் உள்ளிட்ட 4 பலமான ஸ்பின்னர்களைச் சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலான விசயமாகவே இருக்கப்போகிறது.
பாகிஸ்தான் பவுலிங்.. இந்திய அணியில் 2 மாற்றம்!
இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் தொடங்கியிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வுசெய்தார். கடந்த போட்டிகளில் விளையாடிய அதே பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் விளையாடுகிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதில் அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் குல்தீப் யாதவும் அணியில் இணைந்துள்ளனர்.
இந்தியாவின் ஆடும் லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன்(கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
டாஸ் போடுவதற்கு முன்பு வழக்கம் போல இந்தியா-பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் கைக்குலுக்காமல் கடந்து சென்றனர்.

