vaibhav suryavanshi
vaibhav suryavanshix

3 உலகசாதனைகள் படைத்த ’குட்டி ராட்சசன்’.. 14 வயதில் யாரும் தொடமுடியாத சிகரம்! பெயர் சூர்யவன்ஷி!

இங்கிலாந்து மண்ணில் முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்ற வைபவ் சூர்யவன்ஷி யு19 கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனைகளை படைத்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்.
Published on

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சூர்யவன்ஷி என்ற 13 வயது சிறுவனின் பெயர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. வெறும் 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எல்லோரையும் வாயடைக்க வைத்தது.

13 வயது சிறுவனுக்கு 1 கோடி விலையா?  ஐபிஎல் போன்ற தலைசிறந்த லீக் தொடரில் எல்லாம் அவரால் என்ன செய்ய முடியும்? ஒரு போட்டிக்காவது தாக்குப்பிடிப்பாரா?  என்ற விமர்சனங்களும், கேள்விகளும் வைக்கப்பட்டன.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷிcricinfo

ஆனால் பங்கேற்ற முதல் ஐபிஎல் போட்டியில், சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் லீக்கில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் சிக்சர்களுக்கு பறக்கவிட்டு, சதம் விளாசி எல்லோரையும் வாய்பிளக்க வைத்தார். 35 பந்தில் சதமடித்த அவர், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதத்தை பதிவுசெய்து மிரளவைத்தார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் யு19 அணியில் இடம்பெற்றிருக்கும் சூர்யவன்ஷி, தன்னுடைய பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளை உடைத்து வருகிறார்.

13 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்.. 143 ரன்கள்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய யு19 அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என முன்னிலை பெற்றநிலையில், 4வது ஒருநாள் போட்டி நேற்று வொர்செஸ்டரில் நடைபெற்றது. முதல் போட்டியில் 48 (19), இரண்டாவது போட்டியில் 45 (34), மூன்றாவது போட்டியில் 89 (31) ரன்கள் என அதிரடி காட்டிய அவர் இந்தப் போட்டியில் அதையெல்லாம் தாண்டி அதிரடி காட்டினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, 13 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 52 பந்தில் சதமடித்து அசத்தினார். ஒருமுனையில் 78 பந்தில் 143 ரன்களை சூர்யவன்ஷி குவிக்க, மறுமுனையில் 121 பந்தில் 129 ரன்களை அடித்தார் விஹான் மல்ஹோத்ரா. இருவரின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 369 ரன்களை குவித்தது இந்தியா யு19 அணி.

மிகப்பெரிய இலக்கை நோக்கி இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து யு19 அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 3-1 என 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா.

3 உலக சாதனை படைத்த ’குட்டி ராட்சசன்’

அதிவேக சதம் - 52 பந்தில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி, யு19 ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன்பு 53 பந்தில் சதமடித்திருந்த பாகிஸ்தானின் கம்ரான் குலாம் சாதனையை உடைத்து வரலாற்றை மாற்றி எழுதினார் சூர்யவன்ஷி.

அதிக சிக்சர்கள் - அதுமட்டுமில்லாமல் யு19 ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு ஒரு இன்னிங்ஸில் 8 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இளம் வயது செஞ்சூரியன் - மேலும் யு19 கிரிக்கெட் வரலாற்றில் 14 வயது 100 நாட்கள் என்ற குறைவான வயதில் சதமடித்த முதல் வீரராகவும் மாறி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு 14 வயது 241 நாட்கள் என்ற வயதில் சதமடித்த வங்கதேசத்தின் நஜ்முல் ஷாண்டோ சாதனையை உடைத்து சம்பவம் செய்துள்ளார் சூர்யவன்ஷி.

முந்தைய போட்டியில் 20 பந்தில் அரைசதமடித்திருந்த வைபவ் சூர்யவன்ஷி, யு19 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதமடித்த இரண்டாவது இந்திய வீரராகவும் மாறி சாதனை படைத்து அசத்தினார்.

வெறும் 14 வயதில் சாதனை மேல் சாதனையாக குவித்துவரும் வைபவ் சூர்யவன்ஷி விரைவில் சர்வதேச அணியில் இடம்பிடித்து நட்சத்திர வீரராக உருவெடுப்பார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com