WI அணிக்கு எதிராக சதமடித்த சுப்மன் கில்.. 518 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 1-0 என கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாளில் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. அப்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் போட்டி தொடங்கியது. ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் அடிப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ரன்னுக்கு ஓட ஆசைப்பட்டு ரன் அவுட்டானார். இதனால் அவருடைய இரட்டைச் சதம் பறிபோனது. அவர், 175 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் நிலைத்து நின்ற கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.
அவருக்குத் துணையாக நிதிஷ்குமார் ரெட்டியும் (43 ரன்கள்), துருவ் ஜூரலும் (44 ரன்கள்) சிறப்பான பங்களிப்பை வழங்கினர். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாளில் 200 ரன்களைக் கூடுதலாகச் சேர்த்திருந்தது. அந்த ரன்களுடன் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேரிக்கன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.