2 இந்திய வீரர்கள் சதம்.. 503 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது இந்தியா!
கொலம்போவில் நடைபெறும் 2வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் சதம் (117) அடித்து பிரகாசிக்க, கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதங்களால் ஆதரவு தந்தனர். பின்னர் துருவ் ஜூரல் 115 ரன்கள் குவித்து இன்னிங்ஸை உயர்த்தினார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பரபரப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து 167 ரன்கள் விளாசிய தேவ்தத் படிக்கல் ஆட்டத்தால் 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி.
1-0 என தொடரில் இந்தியா முன்னிலை பெற்றநிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொலம்போவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் முதல் டெஸ்ட்டை தொடர்ந்து 2வது டெஸ்ட்டிலும் சதமடித்து அசத்தினார். 117 ரன்கள் அடித்து படிக்கல் அவுட்டாக, அடுத்தடுத்துவந்த கேப்டன் சுப்மன் கில் 50, ரிஷப் பண்ட் 63 ரன்கள் மற்றும் ஜடேஜா 43 ரன்கள் அடித்து அசத்தினர்.
அதற்குபிறகு வந்த துருவ் ஜூரல் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்து தன்னுடைய 2வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார். ஜூரலின் 115 ரன்கள் ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்த இந்தியா டிக்ளார் செய்தது.

