’ரோகித்தின் அதே உலகக்கோப்பை செலப்ரேசன்..’ பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் அணி கொண்டாட்டம்!
பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. டி.சி. தீபிகா தலைமையில் இந்திய அணி, நேபாளத்தை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரோகித் சர்மாவின் உலகக்கோப்பை கொண்டாட்டத்தை மீண்டும் நிகழ்த்தியது. இந்திய ரசிகர்கள் இந்த சாதனையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டெல்லி மற்றும் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது.
பெங்களூருவில் நடைபெற்ற சில போட்டிகளுக்குப் பிறகு, நாக் அவுட்களுக்கான போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.
இதற்கிடையே லீக் போட்டிகளில், இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் உலகக்கோப்பையிலேயே இறுதிப்போட்டுக்குள் காலடி வைத்து சம்பவம் செய்தது..
ரோகித் சர்மாவை போல கொண்டாட்டம்..
விழிச்சவால் உடைய பெண்களுக்கான முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது நேபாள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் விளையாடிய நேபாள் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் அடித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 12.1 ஓவரிலேயே 47 பந்துகளை வெளியில் வைத்து 115/3 என 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது..
2007-ல் தோனி தலைமையில் இந்தியா முதல் டி20 உலகக்கோப்பையை வென்றது போல, 2025-ல் பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக்கோப்பையை டி.சி. தீபிகா தலைமையில் இந்திய அணி வென்று சாதனை படைத்தது..
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்றபோது இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்த உலகக்கோப்பை கொண்டாட்டத்தை மீண்டும் இந்திய மகளிர் அணி செய்துள்ளது.. இந்த கொண்டாட்டத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

