’படுதோல்வி..’ மொத்தமாக சோடை போன பாகிஸ்தான்.. மிரட்டி வென்ற இந்தியா!
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், இஷான் கிஷன் 77 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்குத் திருப்பினார். பாகிஸ்தான் 114 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியானது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்தது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
ஆனால் தனியாளாக பேட்டிங்கில் மிரட்டிய இஷான் கிஷன் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 77 ரன்கள் குவித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினர். கடைசி நேரத்தில் ஷிவம் துபே, ரிங்கு சிங் அதிரடி காட்ட 175 ரன்களை குவித்தது இந்தியா.
பாகிஸ்தான் படுதோல்வி..
பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 176 ரன்கள் என்ற இலக்கு கடினமானது தான் என்றாலும், பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி வெற்றியை பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் இன்ஃபார்மில் இருந்த ஃபர்ஹான் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே அடிக்க முயன்று 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் காற்றில் பேட்டை சுற்ற 34 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான். அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை கொடுக்க, மறுமுனையில் இருந்த பாபர் அசாம் தேவையற்ற நேரத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி போல்டாகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் என்னதான் போராடினாலும் 114 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. 77 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

