U19 WC Ind Vs Ban : தொடரும் Toss சர்ச்சை.. கேப்டனை அனுப்பாத Ban.. கைகுலுக்கவும் இல்லை!
யு19 உலகக்கோப்பை தொடரில் டாஸ் போடும் நிகழ்வின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதிலும், வங்கதேச அணியின் கேப்டன் அஜிசுல் ஹக்கீம் ஆடும் லெவனில் இருந்தும், அவர் டாஸ் போட வராதது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் - இந்திய கிரிக்கெட் கேப்டன்கள் மட்டுமல்லாது வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளாதது கடந்த ஆண்டு பெரிய அளவில் பேசப்பட்டது. அது, இளைய தலைமுறை கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்றுவரும் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், இன்றைய போட்டியில் வங்கதேசமும் இந்தியாவும் மோதி வருகின்றன. இந்த நிலையில், இன்றைய போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதிலும், வங்கதேச அணியின் கேப்டன் அஜிசுல் ஹக்கீம் ஆடும் லெவனில் இருந்தும், அவர் டாஸ் போட வரவில்லை. அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஜாவத் அப்ரார்தான் டாஸ் போட வந்தார். அப்போது, இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் ஜாவத் அப்ரார் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்க்தேசம், 2026 டி20 உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்கு வரவும் மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர உறவுச் சிக்கல்கள் ஆகிய காரணங்களாலும் பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அது தற்போது இளம் வீரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது.

