4ஆவது டெஸ்ட் டிரா.. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் அபாரம்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்துவந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது டிராவில் முடிந்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்து அசத்தினர். இதனையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆம் இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. இந்தியா, ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 விக்கெட்டுகளை இழந்தது. கே.எல்.ராகுலும், சுப்மன் கில்லும் நிலைத்து நின்று பேட்டிங் செய்தனர். இதன் காரணமாக நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்களுடனும், கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடிய கில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின், கடினமான சூழலில் கைகோர்த்த ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் பொறுமையாக நிலைத்து நின்று ஆடினர். மூன்று நாட்களாக ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணியை இந்த ஜோடி கடைசி நாளில் மிகுந்த தைரியமாகவே எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியின் எந்த ஒரு பந்துவீச்சுத் திறனும் இந்த ஜோடிக்கு எதிராக எடுபடாத நிலையில், ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதமடித்து போட்டியையும் டிரா செய்ய வைத்தனர்.
ஜடேஜா 182 பந்துகளில் 12 பவுண்டரிகளும், ஒரு சிக்சும் விளாசி சதத்தை கடந்தார். வாஷிங்டன் சுந்தரும் 206 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஆறு அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா மாறினார்.
ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு இந்திய வீரர்கள் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருப்பது இதுவே முதல் முறை. கில் 722 ரன்களையும், ராகுல் 511 ரன்களையும், பந்த் - 479 ரன்களையும் ஜடேஜா 454 ரன்களையும் குவித்திருக்கின்றனர்.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று அல்லது நான்காவது இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சதமடித்திருப்பது இதுவே முதல்முறை.. கில் 103 ரன்களையும் வாஷிங்டன் - 101* ரன்களையும் ஜடேஜா 107 ரன்களையும் குவித்திருக்கின்றனர்.