’தட்டிக்கொடுக்க வேண்டிய நீங்களே..’ ஃபேவரட் வீரராக கோலியை தேர்வுசெய்த கான்ஸ்டாஸ்..!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யப்போகும் முக்கியமான போட்டியாக 4வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் அறிமுகமான 19 வயது ஆஸ்திரேலியா வீரர் சாம் கான்ஸ்டாஸ் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவிற்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பும்ராவிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப், ராம்ப் ஷாட் என விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 2 சிக்சர்களை பறக்கவிட்டு மெல்போர்ன் மைதானத்தில் அனல் பறக்க செய்தார்.
வேண்டுமென்றே கான்ஸ்டாஸை மோதிய கோலி..
65 பந்துகளில் 60 ரன்கள் என குவித்து மிரட்டிய 19 வயது இளம் வீரருக்கும், விராட் கோலிக்கும் இடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. சிறப்பாக விளையாடிய கான்ஸ்டாஸின் தோள்களில் வேகமாக மோதிய விராட் கோலி ஒரு நிமிடம் கான்ஸ்டாஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் சற்றும் சளைக்காத 19 வயது வீரர், விராட் கோலியிடம் சில வார்த்தைகளை உதிர்த்தார். அவரை நோக்கி விராட் கோலி செல்லும் போது நடுவர் மற்றும் கவாஜா இருவராலும் கோலி சமாதானம் செய்யப்பட்டார்.
ஆனால் ஒரு இளம் வீரருக்கு எதிராக கோலி செய்த இந்த செயல், ஆஸ்திரேலியா ஊடகங்களை அவருக்கு எதிராக எழுத திருப்பியது. சமீபத்தில் விமான நிலையத்தில் பெண் ஒருவரிடத்தில் கோபமுற்றதுடன், கான்ஸ்டாஸ் விவகாரத்தையும் சேர்த்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஐசிசி விதிகளை மீறியதால் கோலிக்கு போட்டிக்கட்டணத்தில் 20% அபராதமும், ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்படி நடவடிக்கை இல்லாமல் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.
கான்ஸ்டாஸின் விருப்பமான வீரர் கோலி..
கான்ஸ்டாஸ் தோள்பட்டையில் வேகமாக கோலி மோதிய பிறகு, 19 வயது வீரரான கான்ஸ்டாஸ் யு19 உலகக்கோப்பையின் போது பேசிய காணொளி ஒன்று வேகமாக பரவிவருகிறது. அந்த வீடியோவில் தன்னுடைய விருப்பமான வீரராக கான்ஸ்டாஸ் விராட் கோலியை தேர்ந்தெடுத்தார்.
வைரலாகி வரும் வீடியோவில், “விருப்பான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பட்டியலில் முதலில் ரோகித் சர்மா, கிறிஸ் கெய்ல், கேன் வில்லியம்சனை ஒதுக்கி டேவிட் வார்னரை தேர்ந்தெடுத்த கான்ஸ்டாஸ், பின்னர் சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்து, பாபர் அசாம், ஜோ ரூட் என பட்டியலில் விருப்பமான பெயர்களை மாற்றிக்கொண்டே வந்தார்.
பின்னர் யுவராஜ் சிங், பிரெண்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் போன்ற வீரர்களை எல்லாம் ஒதுக்கிய கான்ஸ்டாஸ், ஸ்டீவ் ஸ்மித்தின் பெயரை தொடர்ச்சியாக மாற்றாமல் வைத்திருந்தார். இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் அல்லது விராட் கோலி என்ற இறுதி தேர்வில், ஒரு நொடி கூட தாமதிக்காத கான்ஸ்டாஸ் விராட் கோலியை தேர்ந்தெடுத்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், தட்டிக்கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி செஞ்சிட்டிங்களே என விராட் கோலியை இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் விராட் கோலி உடனான மோதல் குறித்து பேசியிருக்கும் சாம் கான்ஸ்டாஸ், நாங்கள் இருவருமே ஒரே உணர்ச்சியோடு இருந்தோம், இது விளையாட்டில் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.