IPL-க்காக ஐசிசி அட்டவணையில் மாற்றமா? 9 ஆண்டில் 0 ஐசிசி தொடர்! அழிகிறதா சர்வதேச கிரிக்கெட்?
ஐபிஎல்லுக்காக ஐசிசி சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதா? 2035 வரை ஐசிசி தொடர்கள் ஐபிஎல் காலகட்டத்தை தவிர்த்து திட்டமிடப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 லீக்குகளின் வளர்ச்சி சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை குறைத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20-யானது கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அடுத்த வருடமே அதன் பல்ஸை பிடித்துக்கொண்ட பிசிசிஐ, 2008ஆம் ஆண்டே இந்தியன் பிரீமியர் லீக்கை தொடங்கி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை கட்டிப்போட்டது. உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என பல திறமை வாய்ந்த வீரர்கள் இதன் மூலம் கண்டெடுக்கப்பட்டு, கவனம் ஈர்த்தனர். புதியதாக ஒரு வீரர் களத்திற்கு வந்து, புகழ்பெற்ற ஒரு சர்வதேச வீரருக்கு எதிராக அபாரமாக செயல்பட்டால் அதன் கவனம் எந்தளவு மக்களை சென்று சேரும் என்பதற்கு, ஐபிஎல் ஒரு உதாரணமாகவே மாறிவிட்டது.
ஐபிஎல்லின் சக்சஸை பார்த்து மிரண்டு போன மற்ற நாடுகள், பிக்பேஷ் லீக், கரீபியன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக், இண்டர்நேசனல் லீக், பங்களாதேஷ் லீக், சவுத் ஆப்ரிக்கா டி20 லீக் என அடுத்தடுத்து தொடங்கி நடத்திவருகின்றனர். உலகளவில் இப்படி பல டி20 லீக்குகள் தொடங்கப்பட்டாலும், ஐபிஎல் தொடருக்கு இருக்கும் வரவேற்பும், அதில் பங்கெடுக்கும் அதிகளவான நிதி மற்றும் சமூக ஊடகங்களின் இருப்பு, இதையெல்லாம் தாண்டி உலகத் தரம் வாய்ந்த வீரர்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில், மற்ற உலக டி20 லீக்குகளுடன் ஒப்பிடும்போது ஐபிஎல் மேலோங்கி நிற்கிறது. உலகளவில் 4வது பெரிய லீக்காக பார்க்கப்படும் ஐபிஎல்லில் கிட்டத்த 9 மில்லியன் டாலர்ஸ் புழங்குவதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் ஐபிஎல்லால் பல நன்மைகள் இருந்தாலும், மறுபக்கம் 3 நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடர் ஒழிக்கப்பட்டு, இருதரப்பு தொடரின் எண்ணிக்கையும், ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையும் குறைந்துவருவதாக விமர்சிக்கப்படுகிறது. ஐபிஎல்லால் டி20 மோகம் அதிகரித்து சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவது குறைக்கப்படுவதாகவும், வீரர்கள் டி20 லீக்-களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தற்போது ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் சுழற்சி அட்டவணையிலும் பிரதிபலித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐபிஎல்லுக்காக சர்வதேச கிரிக்கெட் சமரசமா?
சமீபத்தில் 2035-ஆம் ஆண்டு வரையிலான அனைத்து ஆடவர் உலகளாவிய போட்டிகளுக்கான கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் 2035-ஆம் ஆண்டு வரை ஒரு கல்வியாண்டின் முதல் பாதியில் எந்தவித ஐசிசி தொடரும் நடத்த திட்டமிடப்படவில்லை. அதாவது ஐபிஎல் தொடர் நடத்தப்படும் காலகட்டத்தை காலியாக விட்டு, அதற்கடுத்த மாதங்களிலேயே ஐசிசி தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
2035 வரையிலான அட்டவணையின் படி அடுத்த 9 ஆண்டுகளில் நடத்தப்படும் 2 டி20 உலகக் கோப்பைகள், 3 ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் டிராபிகள் அனைத்துமே அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஐபிஎல்லுக்காக காலியாக விடப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியதோடு விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
ஐபிஎல் சார்ந்த சமீபத்திய தகவலின் படி ஐபிஎல்லை முன்கூட்டியே ஜனவரியில் தொடங்கவும், 12 அணிகளாக மாற்றி போட்டிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில் ஐசிசி அட்டவணையே ஐபிஎல்லுக்காக மாற்றப்பட்டதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இந்த விமர்சனத்தை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

