மீண்டும் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு.. 2வது முறையாக போட்டியின்றி நியமனம்!
ஜெய் ஷா ஐசிசி தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 38 வயதான அவர், ஐசிசி வரலாற்றிலேயே மிக இளம் வயதான தலைவராகும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது இந்தியராக இந்த பதவியை வகிக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐசிசி நிர்வாகக் குழு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐசிசி இயக்குநர்களின் முழு ஆதரவுடன், எதிர்ப்பின்றி ஒருமனதாக ஜெய் ஷா இப்பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மறுநியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஜெய் ஷா, "ஐசிசி நிர்வாகக் குழு என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நான் மிகவும் பெருமையடைகிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து இயக்குநர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாரியம் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன், எங்களது லட்சியங்களைச் செயல்வடிவமாக்குவதிலும், எதிர்காலத் தலைமுறைகளுக்கு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்கும் வகையில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் எங்களது கவனம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
38 வயதான ஜெய் ஷா, 2024-ஆம் ஆண்டு கிரெக் பார்க்லேவுக்குப் பிறகு ஐசிசி தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐசிசி வரலாற்றிலேயே மிக இளம் வயதுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் சஷாங்க் மனோகர் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்குத் தலைமை தாங்கும் ஐந்தாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவச் செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றி, மகளிர் பிரீமியர் லீக் அறிமுகம் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தியவர் ஜெய் ஷா என்பது நினைவுகூறத்தக்கது.

