மன்னிப்பு கேட்ட அர்ஷ்தீப்.. ஆனாலும் தண்டனை விதித்த ஐசிசி!
2026 டி20 உலகக்கோப்பை இறுதியில் இந்தியா 255 ரன்கள் குவித்து நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது. அர்ஷ்தீப் சிங் நடத்தை விதிகளை மீறியதால் ஐசிசி அவருக்கு தண்டனை விதித்தது. போட்டி முடிந்தபின் மன்னிப்பு கேட்டாலும், தண்டனை விதிக்கப்பட்டது.
2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்த இந்திய அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது.
89 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சனும், 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவும் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தனர்.
இந்நிலையில் கோப்பை வென்ற 2 நாட்களுக்கு பிறகு இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி தண்டனை விதித்துள்ளது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு தண்டனை விதித்த ஐசிசி..
கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து 2வது பேட்டிங் செய்தபோது அர்ஷ்தீப் சிங் வீசிய 11வது ஓவரில், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல். அடுத்தபந்து டாட் பந்தாக மாற அதைப்பிடித்த அர்ஷ்தீப் சிங், டேரில் மிட்செலை நோக்கி பந்தை எறிந்தார். அது அவரின் உடலில் பட மைதானத்தில் சிறிது நேரம் கோபக்கனல் வீசியது. தன்னுடைய நடத்தைக்கு மைதானத்தில் அர்ஷ்தீப் சிங் மன்னிப்பு கேட்கவில்லை, டேரில் மிட்செல் அம்பயரிடம் கம்ப்ளைண்ட் செய்ய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வந்து பேசினார்.
போட்டி முடிந்தபிறகு டேரில் மிட்செல்லிடம் அர்ஷ்தீப் சிங் மன்னிப்பு கேட்டாலும், போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

