இந்தியா vs பாகிஸ்தான் சர்ச்சை| சூர்யகுமாருக்கு 30% அபராதம்.. பாகிஸ்தான் வீரருக்கு எச்சரிக்கை!
ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டுமுறை மோதின, இதில் இரண்டு போட்டியிலும் இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும், சர்ச்சைக்குரிய செயல்பாடுகளும் இருந்தன.
லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைக்குலுக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கிறோம், அதற்கான பதிலடி தற்போது கொடுக்கப்பட்டது என்று பேசினார். மேலும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃப், ரசிகர்களின் ’கோலி’ என்ற கோஷத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய சைகளை வெளிப்படுத்தினார். இது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.. தொடர்ந்து மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேஷனும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் வீரர்களின் இந்த நடவடிக்கைக்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
சூர்யகுமாருக்கு 30% அபராதம்..
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரசியல் ரீதியான கருத்தை தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் புகாரளித்திருந்தது. அதன் நடவடிக்கையாக நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விசாரணையில் ஈடுபட்டார். சூர்யகுமார் யாதவ் விசாரணையின் போது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் ஹாரிஸ் ராஃபின் செயல்கள் குற்றமென நடுவரால் உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இருவருக்கும் போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்திய அணி இந்த குற்றத்தின்மீது மேல்முறையீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் இந்தியாவின் மேல்முறையீடு விசாரிக்கப்படாத நிலையில், இறுதிப்போட்டி முடிந்தபிறகு இதற்கான முடிவு என்னவென்று தெரியவரும் என சொல்லப்படுகிறது.