”கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்ப்ரீத் விலகவேண்டும்..” - முன்னாள் இந்திய கேப்டன் கருத்து
உலகக்கோப்பை வென்றதற்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஹர்மன் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர் என்றாலும், கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் அவர் இன்னும் சிறப்பாக பங்களிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
1973-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 1978 முதல் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிவருகிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டை கடந்தாலும் 47 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியால் ஒருமுறை கூட உலக்கோப்பையை வெல்ல முடியவில்லை.. 3 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும், 2 முறை உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்ற இந்திய மகளிர் அணியால் கோப்பையை வெல்லமுடியவில்லை..
இந்தசூழலில் 2025 மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி, ஃபைனலில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜுக்கு கூட கிடைக்காத ‘உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்’ என்ற பெருமையை பெற்று மகுடம் சூடினார் ஹர்மன்ப்ரீத் கவுர்..
ஆண்-பெண் என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டிலும் கபில்தேவ், எம்எஸ் தோனி இரண்டுபேருக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பை வென்ற 3வது இந்திய கேப்டனாக சாதனை படைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்..
இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற அடுத்தநாளே ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டும் என்ற கருத்தை வைத்துள்ளார் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி.
உலகக்கோப்பையில் ஹர்மன்ப்ரீத் செய்த சாதனைகள்!
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடர்முழுவதும் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் கேப்டன்சியானது சிறப்பு வாய்ந்ததாகவே இருந்தது.. உலகக்கோப்பைக்கான அணித்தேர்விலும் சரி, களத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவிலும் சரி இந்திய கேப்டனின் முடிவுகள் அனைத்தும் இந்தியா கோப்பை வெல்வதற்கான ஏணிப்படிகளாக இருந்தன.. இதை தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் கூட உலகக்கோப்பை வென்றதற்கு பிறகு தெரிவித்தார்..
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஷஃபாலி வெர்மாவின் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சும் அனைவராலும் பாராட்டப்பட்டது.. விக்கெட்டை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற நேரத்தில் ஷஃபாலி வெர்மாவின் கைகளில் பந்தை கொடுத்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத்.. யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷஃபாலி வெர்மா ஆட்டத்தையே திருப்பிப்போட்டார்.. இதில் ஷஃபாலி வெர்மாவை 7வது பவுலராக பயன்படுத்தும் முடிவு முழுக்க முழுக்க ஹர்மன்ப்ரீத் உடையது, அந்த நகர்வு எனக்கே ஆச்சரியமாக இருந்ததாக தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் தெரிவித்தார்..
அதேபோல 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரீ சரணியை நேரடியாக உலகக்கோப்பைக்கு எடுத்துவந்த நகர்வு எல்லாம், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியே செய்ய துணியாத ஒரு சம்பவம்.. இடதுகை ஸ்பின்னரான ஸ்ரீ சரணி நடப்பு உலகக்கோப்பை முழுவதும் இந்தியாவின் கேம் சேஞ்சர் பவுலராக மிரட்டிவிட்டார்..
அதேபோல ஒருநாள் கிரிக்கெட் அணியில் விளையாடி ஒரு வருடம் ஆனபோதும் ஷஃபாலி வெர்மாவை நேரடியாக அரையிறுதி மற்றூம் இறுதிப்போட்டியில் விளையாட வைத்த இந்திய அணியின் தீர்க்கமான முடிவு, அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.. அதுமட்டுமில்லாமல் எப்போதும் போல் இல்லாமல் டார்கெட் செட் செய்யவேண்டுமா 330 ரன்களாக இருந்தாலும் நாங்கள் அடிக்கிறோம், சேஸ்செய்யவேண்டுமா 350 ரன்களாக இருந்தாலும் நாங்கள் வென்று காட்டுகிறோம் என்ற மனநிலையை இந்திய மகளிர் அணிக்குள் கொண்டு வந்த பெருமையிலும் ஹர்மன்ப்ரீத்தின் பங்கு இருக்கிறது..
இப்படி உலகக்கோப்பை வெல்லவைப்பதற்கான அத்தனை காரியத்திலும் முக்கிய பங்காற்றிய வெற்றிக்கேப்டனை, கோப்பை வென்ற அடுத்தநாளே பதவிவிலக வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் சாந்தா ரங்கசாமி..
ஹர்மன் பதவி விலகவேண்டும்..
அணியின் நலனுக்காகவே இதைசொல்கிறேன் என பேசியிருக்கும் இந்திய மகளிர் அணியின் முதல் கேப்டன் சாந்தா ரங்கசாமி, ”உண்மையில் இந்த முடிவு காலதாமதமானது. ஏனென்றால் ஹர்மன் ஒரு பேட்டராகவும், ஃபீல்டராகவும் சிறந்தவர். ஆனால் சில நேரங்களில் அவர் தடுமாறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.. கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் அதிகமாக பங்களிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். உலகக்கோப்பை வென்றதற்குபிறகு நான் இப்படி சொல்வது சரியாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகவும், ஹர்மனின் சொந்த நலனுக்காகவும், கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் ஒரு பேட்டராக அவரால் இன்னும் அதிகமாக பங்களிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என பேசியுள்ளார்..
மேலும் இந்திய அணியின் புதிய கேப்டனாக இருக்க ஸ்மிரிதி மந்தனா சரியான தேர்வாக இருப்பார், 2029 ஒருநாள் உலகக்கோப்பைக்காக நீங்கள் இப்போதே தயாராகவேண்டும், இந்த ஒருகோப்பையோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து இந்திய அணி கோப்பை வெல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..
உ்லகக்கோப்பை வென்ற மறுநாளே தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டனின் இந்தகருத்து இந்திய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

