தொடர் சறுக்கல்.. இங்கிலாந்து அணியின் புதிய ODI, டி20 கேப்டன் நியமனம்.. யார் இந்த ஹாரி ப்ரூக்?
2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஜோஸ் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 351 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 326 ரன்களை அடிக்க முடியாமல் 8 ரன்களில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் குரூப் பி பிரிவிலிருந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த சூழலில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்ற கேப்டன் ஜோஸ் பட்லர் ‘தோல்வியை அவமானமாக கருதுகிறேன்’ என்று கூறி கேப்டன் பதிவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த கேப்டனாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், ஒருவேளை ஜோ ரூட்டிடமே மீண்டும் கேப்டன்சி பொறுப்பு செல்லுமா என்ற பல குழப்பங்கள் நீடித்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒயிட்பால் கேப்டனாக இளம்வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமனம்..
சர்வதேச வெள்ளைபந்து கிரிக்கெட்டில் ஆக்ரோசமான அணுகுமுறையை கையிலெடுத்த இயன் மோர்கன் தலமையிலான இங்கிலாந்து அணி, 2019 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடியது. அதற்குபிறகு 2022 டி20 உலகக்கோப்பையை பட்லர் தலைமையில் வென்று ஏறுமுகத்தையே கண்டது.
ஆனால் அதற்குபிறகு டெஸ்ட் கிரிக்கெட், டி20, ஒருநாள் கிரிக்கெட் என அனைத்திலும் வீழ்ச்சியையே கண்டுவரும் இங்கிலாந்து அணி, சரியான பாதையை கண்டறிய முடியாமல் தடுமாறிவருகிறது.
இந்தசூழலில் ஒரு இக்கட்டான நேரத்தில் அணியின் தலைமை என்ற மிகப்பெரிய பொறுப்பை ஹாரி ப்ரூக் தோளில் சுமந்துள்ளார். இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட ப்ரூக், செப்டம்பர் 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அணியை வழிநடத்தினார். ஆனால் அந்த தொடர் அவருக்கு தோல்வியில் முடிந்தது.
என்ன இருந்தப்போதும் 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹாரி ப்ரூக், 2018ஆம் U19 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்து அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு கிடைத்த மரியாதை என்று ஹாரி ப்ரூக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.