”Final-க்கு போங்க..கப் அடிச்சிட்டு வாங்க”-Dressing Room-க்கு தேடிவந்த கோலியிடம் தோனி சொன்ன வார்த்தை!

போட்டி முடிந்த நாளில் இருந்து சோஷியல் மீடியாவில் இரு அணி ரசிகர்கள் செய்த சேட்டைகள் என்ன? தற்போது அவர்களை நெகிழ்ச்சி கொள்ளும் வகையில் வெளியாகியுள்ள தகவல் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
virat kohli - dhoni
virat kohli - dhoniPT

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆன போதும் போட்டி குறித்த டாக் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள் ரவுண்டு கட்டி தங்கள் அணிக்கு ஆதரவாகவும் எதிரணியை கலாய்த்தும் பதிவுகளை அள்ளி வீசி வருகிறார்கள். என்ன தான் தோனி ஹாயாக பைக் ரைட் செய்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும், விராட் கோலி அடுத்தப் போட்டிக்கு தயாராவதற்கு சென்றுவிட்டாலும் இரு அணி ரசிகர்கள் இணைய யுத்தத்தை விடுவதாய் இல்லை.

ஆனால், இப்போது இரு அணி ரசிகர்களையும் நெகிழ்ச்சி கொள்ளும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போட்டி முடிந்த நாளில் இருந்து சோஷியல் மீடியாவில் இரு அணி ரசிகர்கள் செய்த சேட்டைகள் என்ன? தற்போது அவர்களை நெகிழ்ச்சி கொள்ளும் வகையில் வெளியாகியுள்ள தகவல் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

ஐபிஎல் தொடரில் கிட்டதட்ட ஒரு நாக் அவுட் போட்டியைப் போல் நடந்தது சென்னை- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி. மே 18 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாகவே சென்றது. கடைசி ஓவரில் 17 தேவை என்ற நிலையில் தோனியும் களத்தில் நிற்க சென்னை அணி ரசிகர்கள் குஷியில் இருந்தார்கள். அவர்களின் குஷியை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது யஷ் தயாள் வீசிய முதல் பந்தில் தோனி விளாசிய 110 மீட்டர் சிக்ஸர். மைதானத்திற்கு வெளியே சென்றது அந்த பந்து. ஆனால், அந்த பந்துதான் சென்னை அணிக்கு வினையாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

ஆம், பந்து மைதானத்திற்கு வெளியே சென்றதால் புதிய பந்து கொண்டு வரப்பட, ஸ்லோவர் பால் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார் யஷ் தயாள். அதற்கு பலனாக முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய முயற்சித்து தோனி ஆட்டமிழந்து வெளியேறினார். சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். இதுபோன்ற சூழலில் எத்தனையோ போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த தோனி அவுட் ஆகிவிட்டாரே என்று அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

இருந்தாலும் இன்னும் 4 பந்துகள் இருக்கே 11 ரன்கள் தானே தேவை என நினைத்தால், அடுத்த 4 பந்துகளையும் துள்ளியமாக வீசி சென்னை ரசிகர்களின் கனவை தகர்த்தார் யஷ் தயாள். 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்று பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது.

virat kohli - dhoni
ஐபிஎல் 2024 - பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த ஆர்சிபியின் கதை

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்தது முதலே சோஷியல் மீடியாவில் ஆர்சிபி - சிஎஸ்கே ரசிகர்கள் யுத்தம் தொடங்கிவிட்டது. பல விஷயங்களை முன் வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அதில் முக்கியமான விஷயமாக அமைந்தது, தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்க்கு திரும்பி விட்டதாக வெளிவந்த தகவல் தான். ஆம், போட்டி முடிந்ததும் ஆர்சிபி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தார்கள்.

சிஎஸ்கே வீரர்கள் மைதானத்திற்கு நுழைந்து வரிசையாக நிற்க, அதில் முதல் வீரராக நின்ற தோனி சில நிமிடங்களில் பெவிலியன் திரும்பி விட்டார். திரும்பும் வழியில் ஆர்சிபி பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாப்களுக்கு கைகொடுத்துவிட்டு மளமளவென ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றார். இந்த வீடியோ வைரலாக பரவியது. ஆனால், தோனி கைகொடுக்க காத்திருந்ததாகவும், ஆனால் ஆர்சிபி வீரர்கள் தான் தாமதமாக வந்ததாகவும் சிஎஸ்கே வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இல்லை இல்லை சில நொடிகளிலேயே தோனி திரும்பிச் சென்றுவிட்டார் என்று சில வீடியோக்களை பதிவிட்டு ஆர்சிபி ரசிகர்கள் பதில் கொடுத்தார்கள்.

இதுஒருபுறம் இருக்க வீரர்கள் எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கேப்டன் தோனிக்கு நன்றாகவே தெரியும் என்று கடந்த ஆண்டு சென்னை அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி கோப்பை வென்ற போது நடந்த சம்பவத்தின் வீடியோவை தீயாக பகிர்ந்து வருகிறார்கள் சிஎஸ்கே ஃபேன்ஸ்.

சிஎஸ்கே ஃபேன்ஸ் பகிர்ந்த அந்த வீடியோவில் 2023 ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்து கோப்பை வென்ற உற்சாகத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருக்க, அங்கே வந்த தோனி எதிரணிக்கு கைகொடுக்க வேண்டும் வாருங்கள் என அழைப்பார். இந்த வீடியோவைதான் தற்போது சிஎஸ்கே வீரர்கள் கையிலெடுத்து ஆர்சிபிக்கு எதிராக கம்பு சுத்தி வருகிறார்கள்.

virat kohli - dhoni
”இதுக்கே இந்த ஆட்டமா..” தோனியையும் CSKவையும் விமர்சிக்கும் RCB ரசிகர்கள்!

இதற்கு முன்பாகவே இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் தோனி ஆட்டமிழந்த போது அவருக்கு ஆர்சிபி வீரர்கள் உரிய மரியாதை கொடுக்க தவறிவிட்டதாக நேரடியாகவே குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஒருவேளை தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் கைகுலுக்கி அவரை அனுப்பி இருக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

இதற்கிடையில் தான் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு விஷயம் கிடைத்தது. ஆம், தோனி ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு சென்றுவிட்டதை அறிந்த விராட் கோலி உடனே அவரை தேடிக்கொண்டு அங்கே சென்றார். விராட் கோலி சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி செல்லும் வீடியோ வெளிவந்தது. அந்த வீடியோவை வைத்து ’நாங்கள் மிகவும் கண்ணியமானவர்கள்’ என்று ஆர்சிபி ரசிகர்கள் கெத்து காட்டினார்கள்.

இதெல்லாம் தாண்டி சென்னை அணி ரசிகர்களுக்கு மைதானத்திற்கு உள்ளேயும், மைதானத்திற்கு வெளியேயும் நடந்த சில அசௌகரியமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் போட்டி நடந்த இரவு ‘ரசிகர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பி இருப்பீர்கள்’ என்று பதிவிட்டு இருந்தது. சென்னையில் போட்டி நடந்த போது மற்ற அணி ரசிகர்களை நாங்கள் எப்படி நடத்தினோம் தெரியுமா என்று சிஎஸ்கே ஃபேன்ஸ் புலங்காயுதமாக போஸ்ட்டுகளை பதிவிட்டார்கள்.

ரசிகர்களை குஷியாக்க  ஒரு தகவல்!

இப்படி மாறிமாறி சென்று கொண்டிருக்க இரு அணி ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், ட்ரெஸ்ஸிங் ரூமிற்கே வந்து தன்னை பார்க்க வந்த விராட் கோலியிடம் மகேந்திர சிங் தோனி சொன்ன வார்த்தைகள் தான் அது. ‘எப்படியாவது ஃபைனலுக்கு போய், கோப்பையை வென்றுவிட்டு வாருங்கள்.. உங்களுக்கு எனது வாழ்த்துகள்’ என தோனி விராட் கோலியிடம் நம்பிக்கை வார்த்தைகள் சொன்னதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தோனி - விராட் கோலி இடையிலான நட்பை காட்டுவது போல் இருப்பதாக இரு அணி ரசிகர்களும் சிலாகித்து வருகிறார்கள்.

தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள பெங்களூரு அணி நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் 8 போட்டியில் ஒரு தோல்வியை பெற்ற ஆர் ஆர் அணியும், முதல் 8 போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் வென்று பிளே ஆஃப்க்கு வந்துள்ள ஆர்சிபி அணியும் மோதப்போகிறது. என்னதாக சில சிஎஸ்கே ரசிகர்கள் தாருமாறாக கருத்துக்களை பதிவிட்டாலும், ஆர்சிபி அணி எப்படியாவது வெற்றி பெற்று முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை அணி ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com