”உலக கிரிக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் தேவை..” - இதயத்திலிருந்து பேசிய கம்பீர்
உலக கிரிக்கெட்டிற்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேவை என்றும், நல்ல டெஸ்ட் அணிதான் சிறந்த கிரிக்கெட் நாடாக இருக்கும் என்று கவுதம் கம்பீர் மனதிலிருந்து பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாமினேட் செய்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்த்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியது. 23 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் கெம்ப்பெல்லும், 8 ஆண்டுகளுக்கு பிறகு ஷாய் ஹோப்பும் சதமடித்து அசத்தினர்.
ஆனால் முடிவில் 2 போட்டிகளையும் வெற்றிபெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேவை..
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வென்றதற்கு பிறகு பேசிய கவுதம் கம்பீர், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை பற்றி மனம் திறந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “என் இதயத்திலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன் - உலக கிரிக்கெட்டுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தேவை - ஒரு நல்ல ஸ்டிராங்கான டெஸ்ட் அணி என்பதுதான் ஒரு ஸ்டிராங்கான கிரிக்கெட் நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பேசினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் கடந்தகாலங்களில் மிகவும் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸ் ஆண்கள் அணி இல்லாத நிலையில், மகளிர் உலகக்கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லை.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வருமானத்திலும், கட்டுமானத்திலும் வலுவிழந்திருக்கும் நிலையில் நல்ல வீரர்கள் பிரான்சைஸ் டி20 லீக்களில் விளையாட சென்றுவிடுவது பெரிய பிரச்னையாக மாறுகிறது. இந்தசூழலில் அஸ்வின் போன்ற முன்னாள் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை வலுப்படுத்த சரியான வழியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றனர்.