High Risk - High Reward | டி20 பேட்டிங் வரிசையில் ஏன் குழப்பம்..? கம்பீரின் கூர்மையான பதில்!
இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையில் செய்யப்பட்டுவரும் மாற்றங்கள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் வீரர்கள் பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டனர். இதுகுறித்து கவுதம் கம்பீர், 'வெகுமதி வேண்டுமானால் ரிஸ்க் தேவை' என கூறியுள்ளார். முடிவில் அணியின் தாக்கமே முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவிருக்கிறது.. 2024 டி20 உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருந்துவரும் இந்திய அணி, கோப்பையை தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது..
புதிய கேப்டன், புதிய கோச் என இந்திய டி20 அணி பயணப்பட்டாலும், இதுவரை சூர்யகுமார் மற்றும் கம்பீர் இருவருக்குமே டி20-யில் வெற்றிகள் மட்டுமே குவிந்துவருகின்றன..
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது.. ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராகவே இந்திய அணி பல்வேறு மாற்றங்களை அணிக்குள் புகுத்தியது.. தரமான வீரர்கள் அணியில் இருந்தபோதும் அவர்கள் சரியான இடத்தில் களமிறக்கப்படாமல் பேட்டிங் வரிசையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது..
முடிவில் 2-1 என டி20 தொடரை இந்திய அணி வென்றாலும், பேட்டிங் ஆர்டரில் யார் நிலையான இடத்தில் விளையாடப்போகிறார்கள் என்ற குழப்பம் எல்லோருக்கும் இருந்துவருகிறது..
வெகுமதி வேண்டுமானால் ரிஸ்க் தேவை..
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் பட்டேல் போன்ற வீரர்களின் பேட்டிங் வரிசையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டது.. சில தருணங்களில் முன்வரிசையிலும், பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டு விளையாடினார். இந்த மாற்றங்கள் விமர்சிக்கப்பட்டாலும், ரிவார்டு வேண்டுமானால் ரிஸ்க் தேவை என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்..
இதுகுறித்து பேசியிருக்கும் கவுதம் கம்பீர், “பேட்டிங் ஆர்டரில் நிலைத்தன்மை வேண்டுமென்பது என்னை பொறுத்தவரை மிகைப்படுத்தப்படுவதாக நினைக்கிறேன்.. உங்களுக்கு தொடக்க வீரர்கள் மட்டுமே நிலையானவர்கள், மற்ற அனைவரும் அணியின் சூழலுக்கு ஏற்ப விளையாட தயாராக இருக்கவேண்டும்.. அணியில் பேட்டிங் வரிசையை விட வீரர்கள் ஏற்படுத்தும் தாக்கம் மட்டுமே முக்கியம்.. நாங்கள் டி20 கிரிக்கெட்டுக்கு ஒருபடி முன்னே இருக்க நினைக்கிறோம், அதற்கான சோதனையில் இளம்வீரர்கள் சரியாக செயல்படுகின்றனர்.. இது ஆபத்தான அணுகுமுறை தான், ஆனால் அதிக வெகுமதி வேண்டுமானால் அதிக ரிஸ்க்கை எடுத்துதான் ஆகவேண்டும்.. இந்த அணி அச்சமற்றதாகவும் அதே நேரத்தில் புத்திசாலித்தனமான அணியாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என பேசியுள்ளார்.

