பாகிஸ்தான் கேப்டனை மறைச்சு வையுங்க! இங்கிலாந்து சென்றால் இந்த பிரச்னை? முன். வீரர் பரபரப்பு கருத்து!
இம்ரான் கான் காலத்திலிருந்து ஐசிசி கோப்பைகள் வென்ற பாரம்பரியத்தைக் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சமீபத்திய அரசியல், நிர்வாக குழப்பங்களால் கடுமையான சறுக்கலை சந்திக்கிறது. பயிற்சியாளர், கேப்டன் மாற்றங்கள் நடுவே பாபர் அசாம் மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருகாலத்தில் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக விளங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்ரான் கான் தலைமையில் 1992 உலகக்கோப்பை, 2009-ல் டி20 உலகக்கோப்பை, 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. எப்போதெல்லாம் அந்த அணி ஃபார்ம் அவுட்டில் இருப்பதுபோலவும், கீழிறங்குவது போலவும் தோன்றினாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்து கோப்பை வெல்வது வழக்கம். ஆனால் இம்முறை அந்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டும் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துவருகிறது.
அதிகப்படியான பயிற்சியாளர்கள் மாற்றம், கேப்டன்கள் மாற்றம், மூத்த வீரர்களுக்கு இடையே மோதல் என மறுசீரமைப்பு காலத்தில் இருக்கும் அந்த அணி தடுமாறிவருகிறது. இந்நிலையில் முன்பு 3 வடிவ பாகிஸ்தான் அணிக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம், பின் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது மீண்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் 2021 டி20 உலகக்கோப்பை அரையிறுதி, 2022 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை பாகிஸ்தான் முன்னேறியிருக்கும் நிலையில், அவருடைய கேப்டன்சி மாற்றம் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற்றத்தை கொடுக்கும் என பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பாபர் அசாம் தலைமையில் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 1-1 என தொடரை சமன்செய்தது. அதைத்தொடர்ந்து அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. WTC புள்ளிப்பட்டியலில் 2 வெற்றிகளுடன் 8வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, இந்த தொடரை வெற்றிபெறுவது அல்லது சமன்செய்வது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்லவிருக்கும் நிலையில், அங்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இங்கிலாந்து ஊடகங்களிடமிருந்து ஒளித்து வைக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் என்பது ஒரு கடினமான பணி என்று கூறியிருக்கும் அவர், ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலும் வருகை தரும் அணிகளைச் செய்திகளில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த முயற்சிக்கின்றன, அதனால் பாபர் அசாம் இங்கிலாந்து ஊடகங்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மீண்டும் 3 வடிவ பாகிஸ்தான் அணிக்கும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருக்கும் சூழலில், தற்போது ஒருநாள் அணி கேப்டனாக இருக்கும் ஷாஹீன் அப்ரிடிக்கு அதில் விருப்பம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் குழப்பம் நிலவுகிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

