இன்னும் பாடம் கற்காத சிஎஸ்கே.. மீண்டும் வெளிநாட்டு பயிற்சியாளரா? லிஸ்ட்டில் இருக்கும் 4 பேர்!
சிஎஸ்கேவுடன் 18 ஆண்டுகள் இணைந்து 7 கோப்பைகள் வென்ற ஸ்டீபன் பிளெமிங், அணியின் சமீபத்திய தோல்விகளால் விலகிய நிலையில், புதிய பயிற்சியாளராக யாரை தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய பயிற்சியாளர் வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும், வெளிநாட்டு பெயர்கள் லிஸ்ட்டில் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 18 ஆண்டுகள் பயணித்த நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கேவிற்கு மொத்தமாக 7 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஒரு அணிக்காக அதிக கோப்பைகள் வென்ற ஒரே பயிற்சியாளரான பிளெமிங், அடுத்தடுத்த 3 ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி சரியாக செயல்படாததால் பயிற்சியாளர் பதவியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார்.
இந்தசூழலில் அடுத்த பயிற்சியாளராக யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்ற பேச்சு அதிகமாக இருந்துவரும் சூழலில், பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சிஎஸ்கேவிற்கு இந்திய பயிற்சியாளர் தான் நியமிக்கப்பட வேண்டும், சொந்தமண்ணில் சிறப்பாக செயல்பட லோக்கல் பயிற்சியாளர் தான் அவசியம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் சிஎஸ்கே ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரையே நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, சிஇஒ காசி விஸ்வநாதன், சிஎஸ்கே-வின் முழுநேர இயக்குநரான ரூபா குருநாத், எம்.எஸ். தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கலந்து ஆலோசித்த பிறகு புதிய பயிற்சியாளரை இறுதி செய்வார்கள். அவர்களுக்கான பயிற்சியாளர் தேர்வுகளில் 4 பேர் இருப்பதாகவும், அவர்களில் முதன்மை தேர்வாக முன்னாள் சிஎஸ்கே வீரரான பிரெண்டன் மெக்கல்லம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) 2027 ஐபிஎல் தொடரின் போது தனது பயிற்சியாளரை விடுவிக்கத் தயாராக இருப்பதால், இங்கிலாந்தின் குறுகியவடிவ போட்டிகளுக்கான பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் சிஎஸ்கே அணியில் இணையக்கூடும் என்று தெரிகிறது.
2014 மற்றும் 2015 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கும் மெக்கல்லம் 28 போட்டிகளில் 841 ரன்கள் அடித்துள்ளார். தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக சதமடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெக்கல்லமை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கான தேடலில் முன்னாள் சிஎஸ்கே வீரர்களான ஆல்பி மோர்கல் மற்றும் மைக் ஹஸ்ஸி இருவரும் இருக்கின்றனர். சிறந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைண்ட்டை கொண்டிருக்கும் மைக் ஹஸ்ஸி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தலைமை பயிற்சியாளராக மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதேபோல 2010 மற்றும் 2011 ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆல்பி மோர்கலும் பயிற்சியாளருக்கான பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது SA20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸின் சகோதர அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை கடந்து 20 ஆண்டு பயிற்சியாளர் அனுபம்பெற்ற மைக் ஹெசனும், முன்னாள் ஆஸ்திரேலியா வீரரும் பிக்பேஷ் லீக்கில் அடுத்தடுத்து 2 கோப்பைகள் வென்ற பயிற்சியாளருமான ஆடம் வோஜஸ்-ம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிஎஸ்கே அணி அடுத்த சகாப்தத்திற்கான, மறு சீரமைப்பிற்கான ஒரு பயிற்சியாளரை தேடும் நிலையில், அவர் ஒரு இந்திய பயிற்சியாளராக இருப்பதையே ரசிகர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே பிளெமிங்கை போன்று வெளிநாட்டு பயிற்சியாளரை வைத்து கோப்பை வெல்லும் பழைய யுக்தியை கையாளப்போகிறதா? அல்லது இளம் வீரர்கள் கொண்ட அணியை புத்துணர்ச்சியுடன் வழிநடத்தப்போகும் ஒரு உள்நாட்டு பயிற்சியாளரை தேடப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

