ஆஸி. Ex வீரர் கவலைக்கிடம்.. கோமா நிலையில் சிகிச்சை.. யார் இந்த டேமியன் மார்ட்டின்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கவலைக்கிடமான நிலையில், பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின். 54 வயதான டேமியன் மார்ட்டின் சமீபத்திய நாள்களில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் கோமாவில் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பைகளை வென்ற அணியிலும் 2006 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 சதங்களுடன் 4,406 ரன்களையும் 208 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களுடன் 5,346 ரன்களையும் 4 டி20 போட்டிகளில் 120 ரன்களையும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் பந்துவீச்சில் 12 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 21 வயதில் டெஸ்டில் அறிமுகமான அவர், 1992ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில், 23 வயதில் மேற்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனானார். 2000களின் முற்பகுதியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார். 2003 உலகக் கோப்பை வென்ற அணியில் அவர் இடம்பெற்றார், விரல் உடைந்த போதிலும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தது பிரபலமானது. 2006-07 ஆஷஸ் தொடரின்போது தனது கடைசி டெஸ்டில் விளையாடினார். அதன்பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவந்தார்.

