டெஸ்ட்டா? டி20 கிரிக்கெட்டா? வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்.வீரர்கள்! Test-ல் இருக்கும் நிதி பிரச்னை?

ஒரே நாளில் இரண்டு தரமான டெஸ்ட் போட்டி வெற்றிகளை கண்ட கிரிக்கெட் உலகம், டி20 கிரிக்கெட்டை மீறி டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை விவாதித்து வருகிறது. பலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள குறையை நீக்குங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Test Cricket
Test CricketICC

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் தோல்வியின் விளிம்பிலிருந்து 8 ரன்கள் மற்றும் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகளை வீழ்த்தி வரலாறு படைத்தனர்.

27 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாறு படைத்த அதேநேரத்தில், 190 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகும் இந்திய அணியை முதல்முறையாக வீழ்த்தி இங்கிலாந்து அணி புது சகாப்தத்தை எழுதியது.

இந்நிலையில் இரண்டு நம்ப முடியாத வெற்றிகளுக்கு பிறகு பல முன்னாள் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மைக்கேல் வாகன்:

உலகத்தின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. அதைப்பார்த்துக்கொண்டிருந்த முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் லாரா மற்றும் கார்ல் கூப்பர் இருவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்நிலையில் கூப்பர் அழுத வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், “ ஒரு டெஸ்ட் வெற்றிக்காக பிரையன் லாரா அழுகிறார், கார்ல் கூப்பர் அழுகிறார். இதன் அர்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? டி20 கிரிக்கெட் நல்லதுதான், ஆனால் ஒருபோதும் இதுபோன்ற உணர்வுகளை அவற்றால் கொடுக்கவேமுடியாது” என்று கூறியுள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட்:

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் வர்ணனையாளர் பெட்டியில் லாராவுடன் இருந்த ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா தோற்றபோதும் கூட அழுத லாராவை கட்டியணைத்து வாழ்த்து கூறினார்.

அதற்கு பின் பதிவிட்டிருக்கும் அவர், “என்ன ஒரு திரில் நிறைந்த போட்டி. டெஸ்ட் கிரிக்கெட் மறுபடியும் ஏன் சிறந்ததை என்பதை காட்டியுள்ளது. சிறந்த வீரர்களுடன் சிறந்த தருணத்தை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆல்விரோ பீட்டர்சன்:

இரண்டு தரமான டெஸ்ட் போட்டிகள் குறித்து பதிவிட்டிருக்கும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சன், “அனைத்து டி20 கேளிக்கைகளுக்கு இடையிலும், ஒவ்வொரு முறையும் ஒரு கிரிக்கெட் வடிவம் உயர்ந்து நிற்கிறது, அது டெஸ்ட் கிரிக்கெட்” என கூறியுள்ளார்.

கெவின் பீட்டர்சன்:

டி20 கிரிக்கெட்டை மோசமானது என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று பேசியிருக்கும் கெவின் பீட்டர்சன், “டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இடையே ஒரு ஆரோக்கியமான விவாதம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டை கேவலம் என்றும், எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் வேண்டும் என்றும் கூறுபவர்கள் எல்லாம் பழைய காவலாளிகள்தான். அவர்கள் உணராதது என்னவென்றால், பணம் டெஸ்டில் இருந்து வருவதில்லை.

என்னுடைய சிறந்த வடிவம் கூட டெஸ்ட் தான். எல்லாவற்றையும் விட நான் அதை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், நான் காலத்தின் மாற்றத்துடன் செல்லவிரும்புகிறேன். எதிர்காலத்தில் எல்லா நாடுகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் சென்று சேராது என்பதை உணர்ந்தேன். ஆனால் அது தேவையில்லை என நினைக்கவில்லை. இதைப் பற்றிய மக்களின் கருத்துகளைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்? டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான தீர்வை கேட்கிறீர்களா? தயவு செய்து T20 துஷ்பிரயோகத்திற்கு பதிலாக வேறு ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்னெடுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.

கரீபியன் கிரிக்கெட் போட்காஸ்ட்:

சிறந்த டெஸ்ட் அணியை கட்டமையுங்கள் என யாரும் சொல்லாதீர்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என கரீபியன் கிரிக்கெட் போட்காஸ்ட் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பதிவிட்டிருக்கும் பதிவில், “உலக கிரிக்கெட்டுக்கு வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணி தேவை என்று பெரும்பாலானோர் கூறும் கூற்றுகளை கேட்க விரும்பவில்லை. ஷமர் ஜோசப் போன்ற சிறந்த வீரர்களை கிரிக்கெட் விளையாட வைக்கவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நிதி மாதிரியை உருவாக்குங்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி பணத்தை தான் வெஸ்ட் இண்டீஸ் இழந்துவருகிறது. இதற்கு ஐசிசியின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை” என பதிவிட்டுள்ளனர்.

இதை பகிர்ந்திருக்கும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், “டெஸ்ட் கிரிக்கெட்டில் முறையான நிதி மாதிரி வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Test Cricket
இன்டர்நெட் வசதி கூட இல்லாத கிராமம்! 21 வயதில் செக்யூரிட்டி வேலை! WI ஜாம்பவான்களை அழவைத்த ஷமர் ஜோசப்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com