துப்பாக்கியால் சுட்டு திருமணத்தைக் கொண்டாடிய ஜோடி.. கணவர், வீராங்கனை மீது பாய்ந்த வழக்கு!
தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய, அர்ஜுனா விருது வென்ற வீராங்கனை அனு ராணி மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் அனு ராணி. ஈட்டின் எறிதல் வீராங்கனையான இவருக்கும், ஹரியானா மாநிலம் சம்ப்லாவைச் சேர்ந்த கிக் பாக்ஸர் சாஹில் ரோஹ்தக்கிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்களுடைய திருமண வரவேற்பு விழா, கடந்த நவம்பர் 18ஆம் தேதி இரவு மீரட்டில் நடைபெற்றது. அப்போது மேடையில், சாஹில் தனது மனைவி அனுவின் கையைப் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. கூடுதலாக, மாலை அணிவிக்கும் விழாவின்போதும், சாஹில் ரூபாய் நோட்டுகளைக் காற்றில் பறக்கவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சர்தானா காவல் நிலையத்தினர் சாஹில் மற்றும் அனு மீது ஆயுதச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிக் பாக்ஸரான சாஹில், 4 முறை தேசிய சாம்பியனானவர். ஜூலை 2025இல் சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பில் சாஹில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். சாஹிலின் குடும்பம் அமெரிக்காவில் பெட்ரோல் கிடங்குகள் மற்றும் நிலையங்களை வைத்திருக்கிறார்கள், அவற்றை அவரது சகோதரர் தற்போது நிர்வகித்து வருகிறார். சாஹிலின் தந்தை ரவி, மத்திய அரசின் EPFO துறையில் ஒரு ஊழியராக உள்ளார்.
மறுபுறம், மீரட்டின் பகதூர்பூரில் வசிக்கும் அனு ராணி, 2014 ஆம் ஆண்டு ஈட்டி எறிதலில் தேசிய சாதனையை முறியடித்து தனது அற்புதமான வாழ்க்கையைத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு முதல்முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 2022ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனு ராணி, இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் ஈட்டி எறிதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
2023ஆம் ஆண்டில், ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அனு ராணி தங்கப் பதக்கம் வென்று தனது வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தார், உலகின் சிறந்த ஈட்டி எறிதல் வீராங்கனைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எனினும், தகுதித் தரநிலைகளின் அடிப்படையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு அனு ராணி தகுதி பெறவில்லை.

