ட்ரம்ப் சொல்லியும் கேட்காத ஈரான்.. உள்ளே நுழையும் ஈராக்? மாற்று வழியைத் தேடும் FIFA!
அமெரிக்க மண்ணில் திட்டமிடப்பட்ட போட்டிகளில் ஈரான் பங்கேற்க முடியுமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனுமதி வழங்கினார். ஆனால், தன் நாட்டு உச்சபட்ச தலைவரை அமெரிக்க - இஸ்ரேல் படைகள் கொன்றதைத் தொடர்ந்து, தங்கள் அணி போட்டியில் கலந்து கொள்ளாது என ஈரான் தெரிவித்தது. இதையடுத்து ஃபிஃபா மாற்று வழி குறித்து ஆலோசித்து வருகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரை நடத்தவுள்ளன. இதில் விளையாட ஈரானும் தகுதி பெற்றிருந்தது. மேலும், அந்த அணிக்கான 3 லீக் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையே, மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவிவரும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க மண்ணில் திட்டமிடப்பட்ட போட்டிகளில் ஈரான் பங்கேற்க முடியுமா எனக் கேள்வி எழுந்தது. ஆனால், உலகக் கோப்பையில் போட்டியிட ஈரான், அமெரிக்காவிற்கு பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக FIFA தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்திருந்தார். இது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்காவில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்ள ஈரான் கலந்துகொள்ளாது என ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது டோன்யமாலி பதிலடி கொடுத்தார். இதையடுத்து, ஈரானை மாற்றுவது குறித்து ஃபிஃபா பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச நிர்வாகக் குழுவால் ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மாற்று அணிகளாகக் கருதப்படுகின்றன. மத்திய கிழக்கில் நடைபெறும் தாக்குதல் காரணமாக ஈரான் கட்டாயம் விலகும் பட்சத்தில் அதன்மீது தடைகளோ அல்லது ஒழுங்கீன நடவடிக்கைகளோ எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு புறம், ஈரானுக்குப் பதில் ஈராக் அறிவிக்கப்பட்டால், நடைபெறும் தாக்குதலைப் பொறுத்து அந்த அணியும் பயணத் தடைகளை எதிர்கொள்ளும் என அரசியல் ஆர்வலர்கள் கணக்கிடுகின்றனர்.

