“கிரிக்கெட்டை விட விவசாயம் செய்வது கடினம்..” அனுபவத்தை பகிர்ந்த தோனி!
முன்னாள் இந்திய கேப்டன் தோனி, விவசாயம் செய்வது கிரிக்கெட்டைவிட கடினம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஸ்ட்ராபெரி பயிரிட முயற்சித்தபோது விவசாயத்தின் சவால்களை உணர்ந்ததாக கூறிய அவர், விவசாயம் பொறுமையை கற்றுக்கொடுத்தது என பகிர்ந்தார்.
முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, சில தினங்களுக்கு முன்பு ஐபில் உள்ளிட்ட அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அவருடைய ஓய்வை அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர் சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவித்தது.
3 மேஜர் ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக வலம்வரும் தோனி, இந்தியாவிற்காக ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஷ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பை மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றுள்ளார். இவற்றை கடந்து இந்திய அணிக்காக மொத்தமாக 538 போட்டிகளில் விளையாடி, 17000க்கும் மேற்பட்ட ரன்களையும், 800க்கும் மேற்பட்ட ஆட்டமிழப்புகளையும் செய்துள்ளார்.
கிரிக்கெட்டை கடந்து அகாடமி நடத்திவரும் தோனி, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, விளம்பரங்களில் நடப்பதை கடந்து விவசாயமும் செய்துவருகிறார்.
இந்த நிலையில் விவாசயம் செய்வது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் தோனி, “என்னிடம் ஒரு பெரிய நிலம் இருந்தது. ஒரு நாள் அதில் விவசாயம் தொடங்கலாம் என்று நினைத்தேன். அது மிகவும் எளிதானதாக இருக்கும் என்று எண்ணி, ஸ்ட்ராபெரி பயிரிட முடிவு செய்தேன். கொஞ்சம் ஸ்ட்ராபெரி செடிகள், தண்ணீர் மற்றும் சரியான வானிலை இருந்தால் போதும், எல்லாம் சுமுகமாக வளர்ந்துவிடும் என்று நினைத்தேன்.
ஆனால், நான் அதைச் செயல்படுத்தத் தொடங்கியபோதுதான், விவசாயம் என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், விவசாயத்தை விட கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. கிரிக்கெட்டில் முயற்சியும், சரியான முடிவுகளை எடுப்பதும் மிகவும் முக்கியம்; ஆனால் விவசாயம் எனக்கு அதைவிட மிக முக்கியமான ஒன்றான பொறுமையைக் கற்றுக்கொடுத்தது” என பேசியுள்ளார்.

