ஒரே போட்டியில் 5 உலக சாதனை.. உலகையே மிரளவைத்த சூர்யவன்ஷி! சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை!
15 வயது இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி, யுஏஇ-க்கு எதிரான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக்கோப்பை போட்டியில் 52 பந்தில் இரட்டை சதமடித்து 5 உலக சாதனைகளை படைத்தார். 28 சிக்சர்களுடன் 384.9 ஸ்ட்ரைக்ரேட் என இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை வழங்கிய அவரது ஆட்டம், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தது.
அதிரடிக்கு பெயர்போன கிறிஸ் கெய்ல், பிரெண்டன் மெக்கல்லம், வீரேந்தர் சேவாக், ஷாஹித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா போன்ற வீரர்களை எல்லாம் காலாவதி வீரர்களாக மாற்றிவருகிறார் 15 வயது இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி. ’இன்னைக்கு ஆட்டம் சிக்கிடுச்சி, சிக்குற பவுலர் எல்லாம் சின்னாபின்னம் ஆகப்போறாங்க’ என்ற MODE-ல் தான் எப்போது சூர்யவன்ஷிக்கான நாள் அமைந்தாலும் மாறிவிடுகிறது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற யுஏஇ-க்கு எதிரான ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டியில் காலத்திற்கும் அழிக்கவே முடியாத ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. கிரவுண்டின் நாலாபுறமும் 28 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 52 பந்தில் இரட்டை சதமடித்து மாபெரும் உலகசாதனையை நிகழ்த்தினார். அவரின் அதிரடியால் வெறும் 14.2 ஓவரில் 250 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்தது இந்திய அணி.
‘பாகிஸ்தானுக்கு எதிராக நீங்க தோத்ததுக்கு யுஏஇ என்னயா பண்ணான்’, ‘நீயெல்லாம் மனுசனே இல்ல தெரியுமா’, ‘கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட அநியாயம்’ என்றெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களோ எங்களிடம் இருந்த ஒரேயொரு ரெக்கார்டையும் இப்படி சல்லிசல்லியா நொறுக்கி வச்சிருக்கியே என வருத்தத்தை பதிவுசெய்து வருகின்றனர்.
உடைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா சாதனை!
எவ்வளவு பெரிய அதிரடியான இன்னிங்ஸை யார் விளையாடினாலும் சுரேஷ் ரெய்னாவின் 25 பந்தில் 87 ரன்கள் சாதனையை மட்டும் உடைக்கவே முடியாது என பெருமைப்பட்டுக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹார்ட்-பிரேக் கொடுத்துள்ளார் சூர்யவன்ஷி. நேற்றைய போட்டியில் வெறும் 24 பந்தில் 88 ரன்கள் அடித்து சிஎஸ்கேவிற்காக அடித்த சுரேஷ் ரெய்னாவின் உடைக்கவே முடியாத சாதனையை உடைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
5 உலக சாதனைகள்!
நேற்றைய ஒரே போட்டியில் மட்டும் 28 பந்தில் அதிவேக லிஸ்ட் ஏ சதம், 40 பந்தில் அதிவேக 150 ரன்கள், 52 பந்தில் அதிவேக இரட்டை சதம், 28 சிக்சர்களுடன் ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் அதிக சிக்சர்கள், 53 பந்துகளை சந்தித்த பிறகு அதிகபட்சமாக 384.9 ஸ்ட்ரைக்ரேட் என 5 உலக சாதனைகளை படைத்துள்ளார் 15 வயதேயான சூர்யவன்ஷி. இவருடைய ஆட்டத்தை பார்த்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பிரம்மித்து போயுள்ளனர்.
முன்னாள் இந்திய பவுலர் ’இது கிரிக்கெட்டில் ILLEGAL’ எனவும், வீரேந்தர் சேவாக் ’EA கிரிக்கெட் விளையாட்டில் கூட இப்படி அடிக்க முடியாது’ எனவும், இலங்கையின் ஆஞ்சிலோ மேத்யூவ்ஸ் ’எந்த அணிக்கு எதிராகவும் இப்படி விளையாடுவது சாத்தியமற்றது’ எனவும், சூர்யகுமார் யாதவ் ’தற்போது நீ தான் என் இன்ஸ்பிரேசன்’ எனவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ’சாதனை என்பது உடைப்பதற்கு தான், ஆனால் இந்தப் பையன் எதையும் உடைக்கவில்லை தனியாக உருவாக்கி வருகிறார்’ என பாராட்டி வருகின்றனர்.

