’ஜெய்ஸ்வால் இருக்கும்போது எதற்குஅவர்..?’ - கில்லின் மெதுவான ஆட்டத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போட்டியில், சுப்மன் கில்லின் மெதுவான ஆட்டம் ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்துள்ளது. 39 பந்தில் 46 ரன்கள் மட்டுமே எடுத்த கில், ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற அதிரடி வீரர்களுக்கு பதிலாக வாய்ப்பு பெற்றதை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், இந்திய அணி 5 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிவருகிறது..
முதலில் 3 போட்டிகள் முடிவில் 1-1 என ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் சமநிலையில் இருக்கும் நிலையில், தொடரின் 4வது டி20 போட்டி குயின்ஸ்லேண்டில் நடந்துவருகிறது..
சுப்மன்கில்லை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.. தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 21 பந்தில் 28 ரன்கள் அடித்து விரைவாகவே வெளியேறினார். மறுமுனையில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தபோதும் 117 ஸ்டிரைக்ரேட்டில் 39 பந்தில் 46 ரன்கள் அடித்தார் சுப்மன் கில்.. 20 பந்துகளுக்கு மேல் களத்தில் நின்றபோதும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத சுப்மன் கில்லை நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்..
கடந்த 2 வருடங்களில் டி20 போட்டிகளில் தொடக்கவீரராக 165 ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் ஜெய்ஸ்வால், 180 ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் சஞ்சு சாம்சனை வெளியில் அமரவைத்துவிட்டு, 140 ஸ்டிரைக்ரேட் வைத்துகொண்டு அதிலும் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தடுமாறும் சுப்மன் கில்லுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறீர்கள் என்ற விமர்சனத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பதிவிட்டிருக்கும் ஒருவர், ”பவர்பிளேயில் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங் செய்தபோதும், 30 பந்துகளை கடந்தும் சுப்மன் கில் சிங்கிளுக்கு ஓடுகிறார். 10 போட்டிகளில் மோசமாக செயல்பட்ட பிறகு, இந்த ஸ்லோவான அரைசதத்துடன் இந்திய அணியில் அவரது இடத்தை நியாயப்படுத்துவார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் டி20-ல் 165+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் & கௌதம் கம்பீர் இருவரும் கில்லுடன் செல்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
மற்றொரு பதிவர் தொடக்க வீரராக 2023-ல் இருந்து டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள இந்திய வீரர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் 190+ ஸ்டிரைக்ரேட்டுடன் அபிஷேக் சர்மா முதலிலும், 180+ உடன் சஞ்சு சாம்சன், 160+ உடன் ஜெய்ஸ்வால், 150+ உடன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பிறகு 5வது வீரராக சுப்மன் கில் இடம்பிடித்துள்ளார்..
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 167/8 ரன்கள் அடித்துள்ளது..

