IPL மேட்ச் பார்க்க வரமுடியும்.. உங்க மகளிர் அணியை ஆதரிக்க வரமுடியாதா..? - SA வீரர்களை விளாசிய பெண்!
2025 மகளிர் உலகக்கோப்பை இறுதியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவாக மைதானத்தில் யாரும் இல்லை. இதனால் தென்னாப்பிரிக்கா ரசிகை ஒருவர் அதிருப்தி தெரிவித்தார்.
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையே நவி மும்பை மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பை வென்றது இந்தியா..
இரண்டு அணிகள் முதல் உலகக்கோப்பையை வெல்வதற்காக போட்டிப்போட்ட நிலையில், முன்னாள் இந்திய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்சுமன், நட்சத்திர வீரர் ரோகித் சர்மா முதலியோர் மைதானத்திற்கு வந்து இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்..
ஆனால் முதல்முறையாக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணியை ஆதரிக்க தென்னாப்பிரிக்காவின் அரசுத் தரப்பிலிருந்தோ, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூடவோ மைதானத்தில் காணப்படவில்லை..
முன்னாள் வீரர்களை விமர்சித்த தென்னாப்பிரிக்க ரசிகை..
இந்திய மகளிர் அணிக்கு முன்னாள் வீரர்கள் தொடங்கி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் என அனைவரின் ஆதரவும் மைதானத்தில் இருந்தது.. ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவாக மைதானத்தில் ஒருவரும் இல்லை, அவர்களுடைய சப்போர்ட்ஸ் ஸ்டாஃப்ஸ் மட்டுமே மைதானத்தில் தென்பட்டனர்..
இந்நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் தென்னாப்பிரிக்கா ரசிகை ஒருவர், "இந்திய அணி சிறப்பாக விளையாடியது, உலகக்கோப்பை வெல்வதற்கு தகுதியான அணியாக செயல்பட்டது.. இந்தியாவின் ஒவ்வொரு தெருக்களிலும், இந்தியா முழுவதிலும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது.. இவை அனைத்தையும் கடந்து இந்திய அணி வெற்றிபெற அவர்களுக்கு சுற்றி ஆதரவாக அரசு, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் இருந்தனர். அனைவரின் பிரார்த்தனையும் உடனிருந்தது.. களத்தில் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விவிஎஸ் லக்சுமன் போன்றவீரர்கள் இருந்தனர்.. சச்சின் டெண்டுல்கர் நேரில் வந்து நன்றாக செயல்படுங்கள் என இந்திய வீரர்களுக்கு கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.. மொத்த இந்தியர்களும் இந்திய அணிமீது அக்கறை எடுத்துக்கொண்டனர்..
ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்காக காட்டிக்கொள்ளவோ, ஆதரிக்கவோ ஏன் ஒருவர் கூட மைதானத்தில் இல்லை.. தென்னாப்பிரிக்கா கொண்டாடும் முன்னாள் வீரர்கள் அனைவரும் எங்கே சென்றனர்? இந்த உலகக்கோப்பை தொடர் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக தெரியவில்லையா? அரசு தரப்பிலிருந்தும் ஒருவரும் இருந்ததாக தெரியவில்லை, இதுதான் தென்னாப்பிரிக்கா.. இந்தளவுதான் அவர்கள் கிரிக்கெட்டை மதிக்கிறார்கள்.. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேற அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், உலகக்கோப்பை வெல்ல அனைத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தென்னாப்பிரிக்காவிற்காக காட்டிக்கொள்ள ஆதரிக்க ஒருவர் கூட இல்லை.. ஒருவேளை அவர்கள் எங்கே வெல்லப்போகிறார்கள் என்று நினைக்கிறார்களா? இதைத்தான் சொல்ல வருகிறார்களா? என்னைப்போல பலபேர் தென்னாப்பிரிக்கா வெல்லும் என நினைத்தார்கள், அப்படித்தான் நீங்களும் இருந்திருக்க வேண்டும்.. இதுதான் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் உள்ள வித்தியாசம்" என அதிருப்தியை வெளிப்படுத்தினார்..
டி வில்லியர்ஸ் மீது விமர்சனம்..
தென்னாப்பிரிக்காவின் ரசிகை பேசிய இந்தவீடியோவை பகிர்ந்து "ஆர்சிபிக்காக ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க இந்தியா வரமுடியும், ஆனால் தென்னாப்பிரிக்கா அணியை ஆதரிக்க வரமுடியாதா டி வில்லியர்ஸ்" என பதிவிட்டுள்ளார்.
அந்தவீடியோவில் ஆர்சிபி மேனேஜ்மெண்ட் கூட அனைத்து செலவையும் செய்து டிவில்லியர்ஸை வரவழைத்திருக்கலாம் என ஒருவர் கமண்ட் செய்ய, டிக்கெட் விலைக்கு கூட காசில்லாமலா இருக்கிறார்கள் என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்..
இந்தசூழலில் இதேகேள்வியை ரவிச்சந்திரன் அஸ்வினும் தன்னுடைய யூடியூப் சேனலில் எழுப்பினார். அவருடைய வீடியோவில் பேசியிருந்த அவர், ஏன் தென்னாப்பிரிக்கா தரப்பில் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்ற கேள்வியை வைத்தார்..

