“ஒருபோதும் நீங்கள் தோனியாக முடியாது ஹர்திக்”- பாண்டியாவை விமர்சித்து வரும் ரசிகர்கள்! என்ன காரணம்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு செயல் கிரிக்கெட் ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.
Dhoni - Hardik
Dhoni - HardikTwitter

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற விண்டீஸ் அணி 2-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் நேற்று மூன்றாவது போட்டியில் பலப்பரிட்சை நடத்தியது இந்திய அணி.

Ind vs Wi
Ind vs Wi

முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 150 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என்ற நினைத்தபோது 19வது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் இரண்டு சிக்சர்கள் கொடுத்து, 2 ஒய்டு பந்துகளை வீச ஒரே ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார் ரோவ்மன் பவல். இறுதியில் 159 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு டஃப் ஸ்கோரை விண்டீஸ் அணி.

Suryakumar
Suryakumar

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் 1, 6 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற முதலிரண்டு போட்டிகளை போலவே ஆட்டம் கண்டது இந்தியா. பின்னர் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் சிறப்பாக ஆடிவரும் திலக்வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் சூர்யகுமார் யாதவ் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.

சதமடிப்பார் என்று நினைத்த போது 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 83 ரன்களில் வெளியேறினார் சூர்யா. சூர்யாவை இழந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் பொறுப்புடன் கடைசிவரை களத்தில் நின்று வெற்றியை தேடித்தந்தார். முடிவில் இந்தியா 17.5 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Dhoni - Hardik
ப்ரைம் ஃபார்மில் ஜொலிக்கும் குல்தீப் யாதவ்! ஒரே போட்டியில் அடுத்தடுத்து சாதனை படைத்து அசத்தல்!

தோனியோடு ஒப்பிட்டு ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வரும் ரசிகர்கள்!

இந்திய அணி வெற்றிபெற கடைசி 18 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது திலக் வர்மா 47 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 18ஆவது ஓவரில் திலக் வர்மா 2 சிங்கிள்களை எடுத்து 49 ரன்களுக்கு சென்றார். அப்போது வெற்றிபெற 14 பந்துகளில் 2 ரன்கள் இருந்தது. இந்தநிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிங்கிளிற்கு சென்று திலக் வர்மாவை அரைசதம் அடிக்க வழிவிடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். வெற்றிபெற நிறைய பந்துகள் இருக்கும் போது அனைவருக்கும் அது போலான எண்ணமே இருக்கும். ஆனால் 18ஆவது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட ஹர்திக் சிங்கிளிற்கு செல்லாமல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அவரின் இந்த செயல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Tilak Varma
Tilak Varma

திலக் வர்மா இந்த டி20 தொடரில் தான் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். முதல் போட்டியில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 39 ரன்களும், இரண்டாவது போட்டியில் 5 பவுண்டரிகள், 1 சிச்கர் விளாசி அரைசதமும் அடித்து அசத்தியிருந்தார். தற்போது இந்த போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தால் ஒரு இளம் வீரருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட உத்வேகமாக இருந்திருக்கும். அதேபோல தொடர்ந்து மூன்று டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் திலக் வர்மா, ரோகித் சர்மாவிற்கு பிறகு இதை செய்த இரண்டாவது பேட்ஸ்மேனாக மாறி அசத்தியுள்ளார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இப்படி செயல்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தோனியுடன் ஒப்பிட்டு விமர்சிப்பது ஏன்?

2014 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற 173 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் தென்னாப்பிரிக்க அணி. 173 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்வார். அப்போது 18.5 ஓவரிலேயே இந்தியா 172 ரன்களை எட்டிவிடும், களத்தில் 68 ரன்களுடன் கோலியும், 0 ரன்னில் தோனியும் இருப்பார்கள். வெற்றிபெற ஒரு ரன் தான் தேவையிருந்த போது 19வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தோனியே போட்டியை முடித்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

பெவிலியனில் இருந்த அனைத்து வீரர்களும் எழுந்துவிடுவார்கள். ஆனால் தோனி போட்டியை முடித்துவைக்காமல் அந்த பந்தை டொக் வைத்து டாட் பந்தாக மாற்றி, ரன்னிற்கு வந்த கோலியையும் அங்கேயே இருங்கள் என்று கூறுவார். அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, போட்டியை முடித்துவைப்பார் கோலி. தோனியின் அந்த செயல் இளம் வீரராக் இருந்த கோலிக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. போட்டியை முடித்துவிட்டு கத்திக்கொண்டு ஓடிவருவார் கோலி.

தற்போது ஹர்திக் பாண்டியாவின் வீடியோவையும், தோனியின் வீடியோவையும் ஒப்பிட்டு ஹர்திக்கை சுயநலமான வீரர் என்று விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். ‘தோனி போல ஒருபோதும் நீங்கள் வரமுடியாது’ என்று ஒரு ரசிகரும், ‘ஒரு பந்தை டாட் வைத்துவிட்டு, அந்த இளம் வீரருக்கு அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கொடுக்க முடியாதா ஹர்திக்? இதுதான் டீம் வொர்க்கா?’ என்று இன்னொரு ரசிகரும் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் பலரும் இதுபோல விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com