பந்தை சேதப்படுத்தியதாக தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்.. ஓய்வு அறிவிப்பு குறித்து பேச்சு!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலந்தர்ஸ் வீரர் ஃபகார் ஜமான், கராச்சி கிங்ஸ் எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, 2026 பிஎஸ்எல் தொடரில் இரண்டு போட்டிகளில் தடைசெய்யப்பட்டார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஃபகார் ஜமான், கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
இக்குற்றச்சாட்டுக்கு எதிராக ஃபகர் ஜமான் மேல்முறையீடு செய்தாலும், போட்டி நடுவர் ரோஷன் மகாநாமா விதித்த தண்டனையை உறுதி செய்த பிஎஸ்எல் தொழில்நுட்பக் குழு, பந்தை சேதப்படுத்தியதற்காகவும், விதி 41.3வது பிரிவை மீறியதற்காகவும், 2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இரண்டு போட்டிகளில் ஜமான் விளையாடத் தடை விதித்தது.
இந்தசூழலில் மிகப்பெரிய குற்றச்சாட்டுக்காக தலைப்புசெய்திகளில் இடம்பிடித்த பிறகு ஃபகார் ஜமான் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வலம்வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தான் ஓய்வு குறித்த செய்திகளுக்கு ஜமான் பதிலளித்துள்ளார்.
ஓய்வு குறித்து பேசியிருக்கும் அவர், "உலகக் கோப்பைக்குப் பிறகு, நான் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருந்தேன். இருப்பினும், இப்போது எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை, எனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சிறப்பான முறையில் முடிக்க விரும்புகிறேன்" என்று ஃபகர் கூறியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த போட்டியின் போது, 13-வது ஓவர் முதல் ஃபகர் ஜமான் பந்தில் ஏதோ செய்வதாகச் சந்தேகித்ததை, கராச்சி கிங்ஸ் நிர்வாகம் நான்காவது நடுவரின் கவனத்திற்கும், அதனைத் தொடர்ந்து போட்டி நடுவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும், கடைசி ஓவருக்கு முன்பே, ஜமானின் செயலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த நடுவர் ஃபைசல் அஃப்ரிடி. பந்தை வாங்கி அதை ஆய்வு செய்தபோது, அதில் ஏதோ அந்நியப் பொருள் கொண்டு சேதப்படுத்தியதாக நடுவர் சந்தேகம் எழுப்பினார். அதைத்தொடர்ந்து ஜமானுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

