110 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து.. 116 ஆண்டுக்கு பின் மோசமான சாதனை!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்னில் சுருண்டது. 116 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனை படைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. தொடரை தான் இழந்தாச்சு, கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்பதையாவது முறியடிக்குமா இங்கிலாந்து என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது.
110 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து..
பரபரப்பாக தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வெறும் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 12 ரன், லபுசனே 6 ரன் மற்றும் ஸ்மித் 9 ரன்னுக்கும் அவுட்டாகி வெளியேறினர். அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தசூழலில் இங்கிலாந்து அணியின் 2 சிறந்த பேட்டர்களான ரூட் மற்றும் ப்ரூக் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டுவருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 15 பாலை சந்தித்த ஜோ ரூட் 0 ரன்னில் நடையை கட்டினார்.
தொடர்ந்து வந்த ஸ்டோக்ஸ் 16, ஜேமி ஸ்மித் 2 மற்றும் வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என ஹாரி ப்ரூக் அதிரடி காட்டினாலும், 41 ரன்னில் வெளியேறினார். 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி. அபாரமாக பந்துவீசிய நெசெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
116 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான சாதனை
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கடைசியாக 1909ஆம் ஆண்டு 20 விக்கெட்டுகள் விழுந்தது. அதற்குபிறகு 116 வருடங்கள் கழித்து முதல் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகள் விழுந்துள்ளது.

