SL vs ENG| முதல் ஒருநாள் போட்டி.. இலங்கையிடம் இங்கிலாந்து தோல்வி!
கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. குசால் மெண்டீஸ் 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். இங்கிலாந்து 252 ரன்களுக்கு சுருண்டது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளின் மோதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்த குசால் மெண்டீஸ் அசத்தினார்.
272 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில், பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இருவரும் 62, 61 ரன்கள் அடித்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதற்குபிறகு வந்த எந்த வீரரும் சோபிக்காததால் 252 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற 93 ரன்கள் குவித்த குசால் மெண்டீஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இவ்விரு அணிகளின் மோதல் கவனம் பெற்றுள்ளது.

