கையிலிருந்த வெற்றியை இழப்பது தான் பாஸ்பாலா..? 2 நாளில் முடிந்த போட்டி! எங்கே சறுக்கியது ENG?
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி வீழ்ச்சியடைந்தது. முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், இரண்டாம் நாளில் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. சாதகமாக இருந்த சூழலில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது..
கடந்த 2010-11ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபேற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதற்குபிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் இருந்துவருகிறது..
இதுவரை 73 ஆஷஸ் தொடர்கள் நடந்துமுடிந்துள்ள நிலையில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் வென்றுள்ளன.. 7 முறை தொடர் சமனில் முடிந்துள்ளது.. கடைசியாக 2023-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது..
இந்நிலையில் 74வது ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது..
முதல் நாளில் 19 விக்கெட்டுகள்..
பெர்த் மைதானத்தில் பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்டார்க்கை சமாளிக்க முடியாமல் 172 ரன்னில் சுருண்டது.. 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டார்க் மிரட்டிவிட்டார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் முதல் நாள் முடிவில் 123 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்..
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் ஸ்விங், பவுன்ஸ் என எல்லாமே இருக்க, ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் சாய்ந்தன. இது 100 வருட ஆஷஸ் வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்தது.. இதுவரையிலான ஆஷஸ் வரலாற்றில் முதல் நாளில் அதிக விக்கெட்டுகளாக 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட சாதனை நேற்று நிகழ்த்தப்பட்டது. இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டு ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்திலும் 2005ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்திலும் முதல்நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தன.
2-ஆம் நாள் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி கடைசி விக்கெட்டுக்கு 9 ரன்கள் மட்டுமே சேர்த்து 132 ரன்களுக்கு ஆல்அவுட்டானது..
பிட்சை கணிக்காத இங்கிலாந்து..
இரண்டாம் நாளில் 40 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.. இரண்டாம் நாளில் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாகவும், பந்துவீசுவதற்கு கடினமாகவும் மாறியது.. அதை சரியாக கையாளாத இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ என்ற அட்டாக் அணுகுமுறைக்கு சென்றது அவர்களை பாதாளத்திற்கு கொண்டு சென்றது..
இரண்டவாது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒருவர் கூட அரைசதமடிக்கவில்லை, மாறாக 164 ரன்களுக்கே சுருண்டு ஏமாற்றம் அளித்தது இங்கிலாந்து அணி..
205 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.. ஆடுகளத்தை சரியாக கணித்த ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் சரியான நேரத்தில் சரியான நபரை களத்தில் இறக்கியது.. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் பந்துவீச்சாளர்களை டாமினேட் செய்தார்.. 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஹெட் 69 பந்தில் சதமடித்து வரலாறு படைத்தார்..
டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டத்தால் ஒரே செஸ்ஸனில் ஆஸ்திரேலியா அணி 205 ரன்கள் விளாசியது.. அப்படியானால் ஆடுகளம் எந்தளவு பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது..
இறுதிவரை பந்துவீச்சாளர்களை ஆக்கிரமித்த ஹெட் 123 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா அணி 2025 ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது..
எங்கே சறுக்கியது இங்கிலாந்து?
முதல் நாளில் இரண்டு அணி பேட்ஸ்மேன்களுக்கும் ரன்கள் அடிப்பது கடினமாக இருந்தாலும், இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்தபோது ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாகவே இருந்தது, ஆனால் அவர்களின் அணுகுமுறை மிகவும் ஆக்ரோஷமாகவும் சில நேரங்களில் பொறுப்பற்றதாகவும் இருந்தது.. அவர்கள் விளையாடும் விதமே இதுதான், பாஸ்பால் ஆட்டம் என்றால் இப்படித்தான் இருக்கும் என கூறுவார்கள். ஆனால் சில நேரங்களில் ஒரு அணி அதன் உத்தியை மறுபரிசீலனை செய்து ஆட்டத்தின் தன்மைக்கேற்ப செயல்பட வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு இங்கிலாந்து வீரராவது நிலைத்து நின்று ரன்களை அடித்திருந்தால், அது மற்றவர்களுக்கும் ரன்கள் அடிக்கலாம் என்ற நம்பிக்கையை கொண்டுவந்திருக்கும்.. உதாரணமாக, இங்கிலாந்து அணியில் யாராவது ஒருவர் சதம் அடித்திருந்தால், விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக நடந்திருக்கும்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் அவர்களை சாய்க்க வேண்டுமானால் மேலும் சிறந்த உத்தியை கொண்டுவர வேண்டுவது கட்டாயம்..

