0-2 | 5 கேட்ச்கள் ட்ராப்.. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் சொதப்பல்! இங்கிலாந்து படுதோல்வி!
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. மிட்செல் ஸ்டார்க் தனது அசாதாரண பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து வீரர்கள் 5 கேட்ச்களை கோட்டைவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன்கள் பெருகியது. இதனால் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் 144வது சீசன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா மண்ணில் நடந்துவருகிறது..
ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட் போன்ற மேட்ச் வின்னிங் பவுலர்கள் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியே தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது..
ஆனால் யார் இல்லை என்றால் என்ன சொந்த மண்ணில் நாங்கள் தான் சாம்பியன் என ஒரு அசாதாரணமா ஆட்டத்தை விளையாடிவருகிறது ஆஸ்திரேலியா.. எந்தக் காரணத்திற்காக ’பாஸ்பால்’ என்ற அணுகுமுறையை இங்கிலாந்து கையில் எடுத்ததோ, அதற்கு எந்த பலனும் இல்லாமல் போயுள்ளது ஆஸ்திரேலியா மண்ணில்..
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கப்பாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிவிட்டார். இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர், கம்மின்ஸ், ஹசல்வுட் இல்லாத குறையை தனியொரு ஆளாக தீர்த்துவைத்துள்ளார்..
அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் 141 பந்தில் 77 ரன்கள் குவித்த அவர், இங்கிலாந்திற்கு பேட்டிங்கிலும் பெரிய சவாலை ஏற்படுத்தினார்..
பிங்க் பால் டெஸ்ட்டாக கப்பாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 334 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் ஜேக் வெதர்ரால்ட் (72), லபுசனே (65), ஸ்டீவ் ஸ்மித் (61), அலெக்ஸ் கேரி (63) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (77) என 5 வீரர்கள் அரைசதமடிக்க 511 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து வீரர்கள் கைக்குவந்த 5 கேட்ச்களை கோட்டைவிட்டு ஆஸ்திரேலியா ரன்குவிக்க பெரிய பங்காற்றினர்.
177 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய மைக்கேல் நெசர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 64 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது..
ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 17 ஆட்டங்களில் 15 தோல்வி மற்றும் 2 டிரா மட்டுமே செய்த இங்கிலாந்து ஒரு வெற்றியை கூட பதிவுசெய்ததில்லை.. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா..

