U19 WC செமி-ஃபைனல்| உயிரை கொடுத்து போராடிய ஆஸி கேப்டன்.. FINAL சென்றது இங்கிலாந்து!
ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U-19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன. இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா முதலிய 4 யு19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்தசூழலில் முதல் அரையிறுதிப்போட்டியானது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.
சதமடித்த இங்கிலாந்து கேப்டன்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. அழுத்தம் நிறைந்த போட்டியில் பொறுப்பை தனதாக்கி கொண்ட இங்கிலாந்து கேப்டன் தாமஸ் ரியூ 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 107 பந்தில் 110 ரன்கள் அடித்து அசத்தினார்.
278 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால் மறுமுனையில் நிலைத்துநின்று ஆடிய ஆஸ்திரேலியா கேப்டன் ஆலிவர் பீக் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழக்க ஒருபக்கம் காயத்தால் அவதிப்பட்ட ஆலிவர் பீக், ஓடமுடியாத நிலையிலும் இறுதிவரை அணிக்காக உயிரை கொடுத்து போராடினார். ஆனால் இறுதியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஆலிவர் பீக்கை பாராட்டிய அஸ்வின்..
ஆஸ்திரேலியா அணிக்காக கடைசிவரை உயிரை கொடுத்து விளையாடிய ஆலிவர் பீக்கை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ஆஸ்திரேலிய U19 அணியின் கேப்டன் ஆலிவர் பீக்கின் ஒரு அற்புதமான ஆட்டம். ஒரு முக்கியமான போட்டியில், நிதானத்துடனும், பதற்றமின்றி அழுத்தத்தைச் சமாளித்து, சிறப்பாக விளையாடினார். அவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது” என பாராட்டியுள்ளார்.
நாளை நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.

