மகளிர் WC| மீண்டும் தென்னாப்ரிக்காவுக்கு Heart Break.. 5வது முறையாக FINAL சென்றது இங்கிலாந்து!
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 169 ரன்கள் குவித்த இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதனால் ஒருநாள் உலகக்கோப்பை இறுதியில் இந்தியாவிடம் தோற்ற தென்னாப்பிரிக்காவுக்கு மீண்டும் மனவேதனை ஏற்பட்டுள்ளது.
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், முதல் அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது பலம்வாய்ந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஒருநாள் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை சென்று இந்தியாவிடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, இந்தமுறை இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 169 ரன்கள் அடித்த நிலையில், தென்னாப்பிரிக்காவால் வெறும் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
உலகசாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை..
அரையிறுதிப்போட்டியில் 4 ஓவரில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இங்கிலாந்து இடதுகை ஸ்பின்னரான சோஃபி எக்லஸ்டோன் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். இந்த விக்கெட்டுகள் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். இதற்குமுன்பு 37 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் அமேலியா கெர் நீடித்த நிலையில், அவருடைய சாதனையை சோஃபி எக்லஸ்டோன் முறியடித்தார்.
அதுமட்டுமில்லாமல் 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, இதுவரை ஆஸ்திரேலியா உடன் மோதிய 3 இறுதிப்போட்டியிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரே இறுதிப்போட்டியில் மட்டுமே வென்று கோப்பை வென்றது. இந்நிலையில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

