DRS சர்ச்சை | Out என தெரிந்தும் விளையாடிய அலெக்ஸ் கேரி.. நடுவர்களின் தீர்ப்பால் Eng வேதனை!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி பேட் செய்தபோது, டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கோளாறு, இங்கிலாந்து அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இப்போட்டியில் 63ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் வீசினார். அப்போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்டர் அலெக்ஸ் கேரி களத்தில் இருந்து அதை எதிர்கொண்டார். அந்த ஓவரின் பந்து ஒன்று, அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் கையில் தஞ்சமடைந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். ஆனால் கள நடுவர் அவுட் இல்லை என்று கூறிவிட்டார். பந்து பேட்டில் பட்ட சத்தம் தெளிவாகக் கேட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி உடனடியாக 'ரிவ்யூ' செய்தது. இதையடுத்து, மூன்றாவது நடுவர் சோதனையின்போது, 'ஸ்னிக்கோ மீட்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவறு நடந்தது. பந்து பேட்டைக் கடந்து சென்றபோது வரைபடத்தில் எந்த அசைவும் ஏற்படவில்லை. மாறாக, பந்து பேட்டிற்கு வெகுதொலைவில் இருக்கும்போதே வரைபடத்தில் சத்தம் இருப்பதாகக் காட்டியது. வீடியோவிற்கும், ஒலிக்கும் சம்பந்தமே இல்லாததால், மூன்றாவது நடுவர் வேறு வழியின்றி கள நடுவரின் தீர்ப்பையே உறுதி செய்தார்.
இதனால் அலெக்ஸ் கேரி நாட்-அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடி சதமும் அடித்தார். 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, அலெக்ஸ் கேரியின் சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 326-8 என்ற வலுவான நிலையை எட்டியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அலெக்ஸ் கேரி தான் அவுட் என தெரிந்தும், அம்பயர் அவுட் கொடுக்காததால் தொடர்ந்து ஆடி சதமடித்ததுடன், அதுகுறித்து பேசியதுதான் இங்கிலாந்து அணியை மேலும் வெறுப்படையச் செய்தது. போட்டி முடிந்த பிறகு, இந்தத் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் பிபிஜி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய போட்டிக்கு எதிராக இதே அலெக்ஸ் கேரி இந்த ஸ்னிக்கோ மீட்டரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தருணங்களில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் அவுட் என தனக்குத் தெரிந்தால் நடுவர் தீர்ப்பு சொல்வதற்கு முன்பே நடையைக் கட்டிவிடுவார். அதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. தவிர, ‘நீங்கள் அவுட் இல்லை’ எனச் சொல்லி நடுவர்கள் அவரை விளையாட வைத்த சம்பங்களும் நிகழ்ந்ததுண்டு. ஏற்கெனவே முதல் டெஸ்டிலும் டிஆர்எஸ் சர்ச்சை வெடித்த நிலையில், இப்போது மீண்டும் தொழில்நுட்பம் சொதப்பியிருப்பது இங்கிலாந்து ரசிகர்களைக் வெறுப்பேற்றியுள்ளது. இந்தச் செயல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து, இங்கிலாந்து அணி, ஐசிசியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது. இன்னொரு புறம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அனைத்துப் போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் செயல்பாட்டில் இருப்பது ஐ.சி.சி.யின் கட்டாயமாகும். இருப்பினும், எந்த தொழில்நுட்ப வழங்குநர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ICC குறிப்பிடவில்லை. இந்த நிகழ்வில், ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் ஸ்னிக்கோ அமைப்பு, UKஇல் டெஸ்ட் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் அல்ட்ராஎட்ஜ் அமைப்பிலிருந்து வேறுபட்டது.

