ஆஷஸ் டெஸ்ட் | 2வது இன்னிங்ஸிலும் சுருண்ட இங்கிலாந்து.. AUSவுக்கு 205 ரன்கள் இலக்கு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இங்கிலாந்து 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நடப்பாண்டு டெஸ்ட் தொடர் நேற்று (நவ.21) தொடங்கியது. ஜனவரி 8-ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுகின்றன. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் பேட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்தினார்.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, அவ்வணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், 32.5 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அவ்வணியில் ஹாரி ப்ரூக் 52 ரன்களும், ஆலி போப் 46 ரன்களும் எடுத்தனர். தவிர, அவ்வணியில் 4 பேர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கு முன்பு அவர் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவிற்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியா மிரட்டியது போன்று இங்கிலாந்தும் பந்துவீச்சில் மிரட்டியது. இதனால், ஆஸ்திரேலியா அணியில் ஒருவர்கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி மட்டும் 26 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் மிரட்டலாலும் ஆஸ்திரேலியாவும் ஒரேநாளில் சரிந்தது. அவ்வணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களையும், கார்ஸ் 3 விக்கெட்களையும், ஆர்ச்சர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. முதல் நாள் ஸ்கோருடன் மேலும் 9 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அது, தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடியது. மீண்டும், ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நிலைகுலைந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அட்கின்சன் 37 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பிரண்டன் டக்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். போலந்து 4 விக்கெட்களை அள்ளினார். இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றிபெற 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

