பாகிஸ்தானை சுருட்டிய பட்லர் படை.. ஸ்டோக்ஸ் ஆட்டத்தால் அதிர்ந்த கொல்கத்தா... இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
pak vs eng
pak vs engpt web

உலகக்கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அரையிறுதிக் கனவுடன் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை ரன்களைக் குவித்தவண்ணம் இருந்தனர். அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 84 ரன்களையும், ரூட் 60 ரன்களையும், பேர்ஸ்டோ 59 ரன்களையும் குவித்தனர். ஸ்டோக்ஸ் 10 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை பாகிஸ்தான் அணி தவற விட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்டோக்ஸ் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் அடித்த 84 ரன்களில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடக்கம்.

பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்களையும், முகம்மது வாசிம் 2 விக்கெட்களையும், சஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 2019 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் ராஜாவாக இருந்தார் பேர்ஸ்டோ. 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 532 ரன்களைக் குவித்திருந்தார். அதில் 2 சதமும், 2 அரைசதமும் அடக்கம். ஆனால் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 215 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் டெத் ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹாரிஸ் ராஃப் முதலிடம் பிடித்தார். அவர் இதுவரை 10 விக்கெட்களை டெத் ஓவர்களில் வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இடத்தில் பும்ரா, முகம்மது வாசிம், சாஹீன் அஃப்ரிடி உள்ளனர். மூவரும் தலா 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி ரன்களை வாரி வழங்கியுள்ளது. இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 4 அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் 337 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 401 ரன்களைக் குவித்தது. உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை ஹாரிஸ் ராஃப் படைத்தார். தற்போது நடந்த உலகக்கோப்பையில் அவர் 533 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

338 ரன்களை இழக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி தடுமாற்றத்துடனே தொடங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான அப்துல்லா ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஃபாகர் ஜாமன் ஒரு ரன்னிலும் வெளியேறினர். 43.3 ஓவர்களில் அந்த அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சல்மான் 51 ரன்களையும் பாபர் ஆசம் 38 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஹாரிஸ் ராஃப் அதிரடி காட்டினார். அட்கின்ஸன் வீசிய 40 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என விளாசினார் ராஃப். 41 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், 43 ஆவது ஓவரில் இரண்டாவது பவுண்டரிகள் என அடித்து நொறுக்கினார் ராஃப். இருந்தபோதும் பாகிஸ்தான் அணி 93 வித்தியாசத்தில் தோற்றது.

சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்களையும் ஆதில் ரஷித், அட்கின்சன், மொயின் அலி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டேவிட் வில்லி தேர்வு செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் 10 முறை மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 8 முறையும் பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

எது எப்படி இருந்தாலும் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நவம்பர் 16 ஆம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்திய அணி அரையிறுதியில் வென்று உலகக்கோப்பையையும் வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com