சாய் கிஷோர்தான் காரணமா? தமிழ்நாடு ரஞ்சி பயிற்சியாளருக்கு தினேஷ் கார்த்திக் கண்டனம்!

ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 47 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி சாதனைப்படைத்துள்ளது.
தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர்
தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர்pt web

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் இதயம் என்றால் ரஞ்சிக் கோப்பை என்பார்கள். ரஞ்சியில் சிறப்பாக விளையாடும் வீரர்களே பெரும்பாலும் இந்திய அணியில் இணைவர்கள். நடப்பாண்டுக்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி. இருப்பினும் மும்பை மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில் பலம் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நீண்ட கால இடைவேளைக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியிருந்த தமிழகம் தோல்வியை தழுவியது ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு, 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனை தொடர்ந்து மும்பை அணி, ஷர்துல் தக்கூரின் சதம் மற்றம் தனுஷ் கோட்டியன்-னின் அரை சதம் மூலம் 378 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் பின்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ்நாடு, மீண்டும் விக்கெட்களை இழந்து திணறியது. 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, 47 ஆவது முறையாக ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 41 முறை ரஞ்சிக் கோப்பையும் மும்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி, தோல்விக்கு சாய் கிஷோர்தான் காரணம் என கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தோல்வி குறித்து பேசிய பயிற்சியாளர், “நாங்கள் போட்டியின் முதல்நாளில் காலை 9 மணிக்கே தோற்றுவிட்டோம். நாங்கள் பந்துவீசியிருக்க வேண்டும். ஆனால் கேப்டனுக்கு வேறு சில உள்ளுணர்வு இருந்துள்ளது. ஆடுகளத்தைப் பார்த்ததும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரிந்தது. டாஸ் வென்றோம். அனைத்தும் சரியாக இருந்தது. பயிற்சியாளராக, மும்பைக்காரனாக எனக்கு நிலைமை நன்றாகத் தெரியும். ஆனால் குதிரையை தண்ணீர் பக்கம் மட்டும்தான் என்னால் அழைத்துச் செல்ல முடியும், அதை குடிக்க வைக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இதற்கு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து இதைக் கேட்டது மிக வருத்தமளிக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற கேப்டனை, ‘நல்ல விஷயங்கள் நடக்க இது ஒரு தொடக்கம்’ என ஆதரிக்க வேண்டும். ஆனால், பயிற்சியாளர் கேப்டனையும், அணியையும் தூக்கி எறிந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com