பவுலர்களுக்கு செய்யுற துரோகம்.. இலங்கையிடம் கோட்டைவிட்டது எப்படி? கம்பீர் மீது பகீர் குற்றச்சாட்டு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இலக்கை நோக்கி பயணிக்கும் இந்தியா, இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டை கைமீறவிட்டது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. முதல் இன்னிங்ஸில் பெரிய முன்னிலை இருந்தும் ஃபால்லோவ் ஆன் கொடுத்து பவுலர்களை சோர்வடையச் செய்தது தவறு என அஸ்வின் கூறுகிறார். குல்தீப் யாதவின் ஸ்பின் திறனை புறக்கணித்த கம்பீரின் முடிவுகள், டெய்ல் எண்டர்களை அவுட் செய்ய முடியாமல் இந்தியாவை டிராவுக்கு தள்ளியதாக அவர் வாதிடுகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இலங்கை சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் வெற்றிபெற்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து கொழும்புவில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டிலும் வென்று 2-0 என இலங்கையை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்து 503 ரன்கள் குவித்த இந்திய அணி டிக்ளார் செய்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதற்குபிறகு இந்தியா பேட்டிங் செய்யாமல் இலங்கையை தொடர்ந்து பேட்டிங் செய்யுமாறு ஃபால்லோவ் ஆன் கொடுத்தது.
இந்நிலையில் தொடர்ச்சியாக 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்த இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 229 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 5ஆம் நாளில் நிலைத்துநின்று ஆடிய அந்த அணி, கடைசிவரை விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் 9 விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை டிராவிற்கு அழைத்துச்சென்றது. வெற்றிக்காக முட்டி மோதிய இந்திய அணியால் கடைசிவரை இலங்கையை தோற்கடிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டிலும் சதமடித்த இலங்கை வீரர் சோனல் தினுஷா ஆட்டநாயகனாக மாறினார்.
இந்தசூழலில் தான் இந்தியா தலைக்கணத்தால் வெற்றியை தவறவிட்டதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்வதுதான் இலக்கு என்று ஒருபுறம் கில்லும், கோப்பை வெல்வது தான் முக்கியம் விமர்சனங்களை பார்க்க மாட்டேன் என்று மறுபுறம் கம்பீரும் கூறிக்கொள்ளும் நிலையில், கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்டதற்கு முன்னாள் வீரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் இந்திய கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சரி, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் சரி 90 ஓவர்கள் வரை இந்தியாவை பந்துவீச வைத்துள்ளது. அப்படியிருந்தும் எப்படி ஃபால்லோவ் ஆன் கொடுத்து இந்திய பவுலர்களை பந்துவீச சொன்னீர்கள். உங்களுடைய ஸ்பின்னர்கள் அனைவரும் 20 ஓவர்களுக்கு மேல் வீசியுள்ளனர், அவர்களுக்கு ஓய்வு தேவையில்லயா? அவர்களால் எப்படி சிறப்பாக பந்துவீச முடியும். எப்படி விக்கெட் டேக்கிங் டெலிவரிகளை வீச முடியும்? இலங்கை அணி 100 ரன்களுக்குள் ஆல்அவுட்டாகி இருந்தாலோ அல்லது குறைவான ஓவர்களில் ஆட்டமிழந்திருந்தாலோ இந்த முடிவு சரியானதாக இருந்திருக்கும். ஆனால் பவுலர்கள் குறித்து ஏன் யாரும் சிந்திப்பதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம் இலங்கையின் டெய்ல் எண்டர்கள் 4 பேர் அவ்வளவு பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைக்கின்றனர். அந்த நேரத்தில் குல்தீப் யாதவின் கூக்ளி, லெக் பிரேக் பந்துவீச்சு இருந்திருந்தால் ஆட்டத்தை எப்போதோ இந்தியா வென்றிருக்கும். குல்தீப் யாதவ் என்ன பாவம் செய்தார் என்று என்று தெரியவில்லை. ஏன் அவர் வஞ்சிக்கப்படுகிறார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காமல், அவருடைய கான்ஃபிடன்ஸ் மொத்தமாக போய்விட்டது. அவரை போன்ற ஒரு பவுலரை இந்தியா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அஸ்வின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோலி, ரோகித் தலைமையில் 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை சென்ற இந்திய அணியால் ஒருமுறை கூட கோப்பை வெல்லமுடியவில்லை. இம்முறை இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் 11 டெஸ்ட் போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிருந்து இந்தியாவால் இறுதிப்போட்டிவரை முன்னேற முடியுமா அல்லது கோப்பை வெல்ல முடியுமா என்ற கேள்வி கேள்வியாகவே நீடிக்கிறது..

