தோனி பகிர்ந்த பிறந்த நாள் வீடியோ - வைரலாக்கும் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த பிறந்த நாள் வீடியோவை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தோனி
தோனிinsta

கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் என்றைக்கும் ரசிகர்களால் ’தல’ எனச் செல்லமாய் அழைக்கப்படும் தோனிக்கும் ஒரு தனி இடம் உண்டு. அவரால் இந்திய அணி பெற்ற வெற்றிகள் கொஞ்ச நஞ்சமல்ல. கபில் தேவ்வுக்குப் பிறகு உலகக்கோப்பைகளை உச்சி முகர்ந்தவர் தோனிதான்.

தோனி
தோனிடிவிட்டர்

அது மட்டுமின்றி, அவருடைய தலைமைப் பண்பும் இன்றுவரை பலரால் பேசப்பட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வுபெற்று விட்டாலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த முடிந்த சீசனில்கூட அவர் தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருடைய 42வது பிறந்த நாள் நேற்று (ஜூலை 7) கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாளுக்கு ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தன்னுடைய பிறந்த நாள் குறித்த ஒரு வீடியோ பதிவை தோனி, இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நாய்களுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதை அவைகளுக்குக் கொடுத்தப் பின்னர் தானும் உண்டு மகிழ்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டு, “உங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி. என் பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பது உங்கள் பார்வைக்காக” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பல லட்சம் லைக்குகளைப் பெற்றிருப்பதுடன், தோனியும் ரசிகர்கள் பலரும் இதை வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com