யுஸ்வேந்திர சாஹலுடன் விவாகரத்து.. 5 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த முன்னாள் மனைவி!
யுஸ்வேந்திர சாஹலும் தனஸ்ரீயும் விவாகரத்து பெற்ற பின்னர், தனஸ்ரீ தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், விவாகரத்து நாளில் உணர்ச்சிவசப்பட்டதாகவும், சாஹல் தன்னை ஏமாற்றவில்லை எனவும் கூறினார். சாஹலின் டி-ஷர்ட் சர்ச்சையையும் தனஸ்ரீ எதிர்கொண்டார்.
"முன்னாள் மனைவியை ஏமாற்றவில்லை"- சாஹல்
பிரபல கிரிக்கெட் வீரரான யுஸ்வேந்திர சாஹலுக்கும், மருத்துவரும் நடன இயக்குநருமான தனஸ்ரீக்கும் கடந்த டிசம்பர் 2020இல் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 18 மாதங்கள் தனித்தனியாக வாழ்ந்த அவர்கள், மார்ச் 20, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சாஹல், “தனது முன்னாள் மனைவியை தான் ஏமாற்றவில்லை” என்று கூறியிருந்தார்.
"இது நீண்டகாலமாக நடந்துகொண்டிருந்தது. மக்களுக்குக் காட்ட வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அது நடக்கவில்லை என்றால் யாருக்குத் தெரியும். ஒருவேளை, அது வேறு சூழ்நிலையாக மாறும். நாங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை நாங்கள் அப்படித்தான் இருந்தோம், நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சாதாரண ஜோடிபோல இருப்போம். நான் விவாகரத்து விஷயத்தைச் சந்தித்தபோது, மக்கள் என்னை ஒரு ஏமாற்றுக்காரன் என்று முத்திரை குத்தினர். நான் ஒருபோதும் ஏமாற்றியதில்லை” என அதில் தெரிவித்திருந்தார்.
சாஹலின் கருத்துக்கு மவுனம் கலைத்த தனஸ்ரீ
சாஹல் கூறிய இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, விவாகரத்து தொடர்பாக தனஸ்ரீ தற்போது பதில் அளித்துள்ளார். ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே பாட்காஸ்ட்டில் பேசியுள்ள அவர், “நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது தீர்ப்பு வழங்கப்படவிருந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நாங்கள் மனதளவில் மிகவும் தயாராக இருந்தபோதிலும், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் எல்லோர் முன்னிலையிலும் அலற ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தவே முடியவில்லை. நான் அழுதுகொண்டே இருந்தேன். அலறி அழுது கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நிச்சயமாக, அதெல்லாம் நடந்தது. அவர் (சாஹல்) முதலில் வெளியேறினார்” எனத் தெரிவித்தார்.
மேலும் அன்றைய தினம் சாஹல் அணிந்து வந்த டி-ஷர்ட் தொடர்பாகவும் எதிர்வினையாற்றியுள்ளார். 'Be Your Sugar Daddy’ என்ற வாசகம் நிறைந்த டி-ஷர்ட்டை அவர் அணிந்திருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது.
டி-ஷர்ட்டால் வந்த சர்ச்சை.. எதிர்வினையாற்றிய தனஸ்ரீ
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட தனஸ்ரீ, "இந்த டி-ஷர்ட் ஸ்டன்ட் நடந்தது என்பதை நான் அறிவதற்கு முன்பே, மக்கள் இதற்கு என்னைக் குறை கூறப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கருத்து தெரிவித்தார். மேலும், ”நீங்கள் அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்க வேண்டும். ஏன் டி-ஷர்ட்டை அணிய வேண்டும்" என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, சாஹலுடனான இல்வாழ்வுக்கு ஆதரவளித்தது தொடர்பாகவும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். "நான் என் துணைக்காக எவ்வளவு நின்றேன் என்பது எனக்குத் தெரியும். அதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். சிறிய அல்லது பெரிய விஷயங்களுக்காக, நான் அங்கே இருந்திருக்கிறேன். ஒருவேளை அதனால்தான், என் உணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.