WPL FINAL| ஆர்சிபிக்கு மரண அடி கொடுத்த டெல்லி.. 204 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 203 ரன்கள் குவித்து ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதமடித்து அசத்தியதுடன், ஹென்றி, லாரா, லிசெல் லீ ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். ஆர்சிபி 204 ரன்கள் சேஸிங்கில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 4வது WPL கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து வது முறையாக தகுதிபெற்று அசத்தியது.
இந்தசூழலில் கோப்பை யாருக்கு என்ற ஹை-லெவல் போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அரைசதமடித்த ஜெமிமா.. 203 ரன்கள் குவிப்பு!
வதோதரா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷஃபாலி மற்றும் லிசெல் லீ இருவரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
6 ஓவரில் 51 ரன்கள் விரட்டிய இந்த ஜோடி பெரிய இலக்கிற்கு அடித்தளம் போட, அடுத்துவந்த கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 பவுண்டரிகளை விரட்டி 32 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். கடைசியாக வந்து நாலாபுறமும் சிக்சர் பவுண்டரிகளக விரட்டிய சின்னெல்லே ஹென்றி 15 பந்தில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 35 ரன்கள் விளாசினார். ஜெமிமா 57 ரன்கள், லாரா 44 ரன்கள், லிசெல் லீ 37 ரன்கள், ஹென்றி 35 ரன்கள், ஷஃபாலி 20 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது டெல்லி அணி.
2வது முறையாக கோப்பை வெல்லவேண்டுமானால் 20 ஓவரில் 204 ரன்கள் என்ற ரெக்கார்டு சேஸிங்கை ஆர்சிபி செய்யவேண்டும். என்ன நடக்கப்போகிறது முதல் முறையாக டெல்லி கோப்பை வெல்லுமா? அல்லது தொடர்ச்சியாக 2வது முறையாக ஆர்சிபி கோப்பை வெல்லுமா? என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

